நாகர்கோவில்: திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை வனச்சரகத்தில் விடப்பட்டுள்ள அரிசிக் கொம்பன் யானை மீண்டும் கேரள வனப்பகுதியில் நுழையாமல் இருக்க அம்மாநில வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கேரள மாநில வனப்பகுதியில் இருந்து கம்பத்துக்குள் நுழைந்த அரிசி கொம்பன் யானை வனத்துறையினரால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு லாரி மூலம் திருநெல்வேலி மாவட்டம் அப்பர் கோதையாறு வனப்பகுதியில் கடந்த 5-ம் தேதி விடப்பட்டது. அரிசிக்கொம்பன் யானையின் நடமாட்டத்தை ரேடியோ காலர் சிக்னல் மூலம் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
அப்பர் கோதையாறு பகுதியிலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் அது சுற்றி திரிவதாகவும், முத்துக்குழிவயல், குற்றியாறு பகுதிகளில் தேவையான இலை தளை உணவு, குடிநீர் கிடைப்பதால் அந்த யானை நல்ல நிலையில் இருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மற்றும் களக்காடு சரணாலய துணை இயக்குநர் மற்றும் வன உயிரின காப்பாளர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி மாவட்டத்தில் கடந்த வாரம் பிடிக்கப்பட்ட அரிசிக்கொம்பன் யானை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட அப்பர்கோதையாறில் உள்ள குற்றியாறு அணைப்பகுதியில் விடப்பட்டது.
இந்த யானை தற்போது நல்ல உடல் நலத்துடன், சீரான உணவு மற்றும் நீர் எடுத்துக்கொள்கிறது. யானையின் நடமாட்டத்தை களக்காடு, அம்பா சமுத்திரம் மற்றும் கன்னியாகுமரி வனக்கோட்ட பணியாளர்கள் இரவு பகலாக கண்காணித்து வருகிறார்கள். யானையின் கழுத்தில் பொருத்தப்பட்டுள்ள ரேடியோ காலர் தொழில் நுட்பம் மூலம் அதன் நடமாட்டம் துல்லியமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் நுழைய வாய்ப்பு: இதுபோல் கேரள வனத்துறையினரும் அரிசிக் கொம்பன் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நெய்யாறு வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உலா வரும் அரிசிக் கொம்பன், கேரள மாநிலத்துக்குள்எப்போதும் நுழைய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ரேடியோ காலர் சிக்னலை பெறும் ஆண்டெனாவை பெரியாறு வனச்சரக அலுவலகத்தில் இருந்து பெறுவதற்கான நடவடிக்கையில் திருவனந்தபுரம் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
அரிசிக் கொம்பன் ஆரோக்கியமாக இருப்பதாக வனத்துறை தெரிவிக்கும் நிலையில் யானை ஆர்வலர்கள் இதை நம்ப மறுக்கின்றனர். தினமும் 40 கிலோ மீட்டர் தூரம் வரை நடக்கும் தன்மை கொண்ட இந்த யானை, தற்போது 7 கிலோ மீட்டர் சுற்றளவு மட்டுமே உலா வருவதாக தெரிகிறது.
யானையின் கால் மற்றும் தும்பிக்கையிலும் காயம் இருப்பதால் அதிக தூரம் அது நகர்ந்து செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையே அரிசிக்கொம்பன் நலம் பெறவும், நீண்ட ஆயுள் பெறவும் வேண்டி திருச்சூர் மாவட்டம் அந்திகாடு அருகே வல்லூர் கிராமத்தில் உள்ள ஆலும்தாழம் மகாவராஹி தேவி கோயிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.