பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வும், கண்காணிப்பும் இல்லாததால் மெரினா கடற்கரையில் ஆங்காங்கே காலி மது பாட்டில்களும், நெகிழிக் குப்பைகளும் மணற்பரப்பில் வீசப்படுகின்றன. இதனால் கடற்கரைச் சூழல் மாசுபடுபடுகிறது.
உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரையாகக் கருதப்படும் சென்னை மெரினா கடற்கரைக்கு, பொழுதைக் கழிப்பதற்காக உள்ளூர் மக்கள் முதல் வெளியூர் மக்கள் வரை குடும்பம் குடும்பமாக வருகை தருவது வாடிக்கையானதாக மாறிவிட்டது. மேலும், வெளிநாடு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் முக்கியமான சுற்றுலாத் தலமாகவே மெரினா விளங்குகிறது.
ஏறக்குறைய 12 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தக் கடற்கரை மணற்பரப்பு தெற்கில் பெசன்ட் நகர் முதல் வடக்கே நேப்பியர் பாலம் வரை நீண்டுள்ளது. பொதுவாக, மெரினா கடற்கரையின் கரையோரம் அமைந்திருக்கும் கடைகளின் அருகிலேயே குப்பைகள் அதிகமாக சேர்க்கப்படுவதால் மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்கள் அவ்வப்போது குப்பைகளைச் சுத்தம் செய்யும் இயந்திரங்களைப் பயன்படுத்தி அதனை அப்புறப்படுத்துவார்கள்.
இருப்பினும், மெரினாவில் முழுமையாகச் சுத்தப்படுத்துவது கடினமான ஒன்றாகவே இருந்து வருகிறது. குறிப்பாக, தண்ணீர் பாட்டில், நெகிழி, காகிதம், கண்ணாடி பாட்டில், இதர குப்பை என மெரினா கடற்கரை மணற்பரப்பு முழுவதும் தொடர்ந்து வீசி எறியப்படுகிறது. சமீப காலமாக மெரினாவில் காணும் இடமெல்லாம் காலி மது பாட்டில்கள் மண்ணில் புதைந்தவாறு காட்சியளிக்கிறது.
கடற்கரையில் காலையில் தினந்தோறும் நடைப்பயிற்சி வருவோர் குப்பைகளைப் பார்த்தவாறு முகம் சுளித்து செல்கின்றனர். வெளிநாட்டு யூடியூபர்களும் பலரும் இப்பிரச்சனை தங்கள் வீடியோக்களில் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.
சமீபத்திய ஆய்வுப் படி துறைமுக நகரங்கள், மீன்பிடி கிராமங்களிலும் அதிகளவில் நெகிழி கழிவுகள் வீசி எறியப்படுவதாகவும், திருவான்மியூர் கடற்கரையில் மணல் சுத்தப்படுத்தும் இயந்திரங்கள் பயன்படுத்தவில்லை எனவும் கூறப்படுகிறது. பாலவாக்கம், நீலாங்கரை, அக்கரை பகுதிகளில் போதிய தூய்மைப் பணியாளர்கள் இல்லாததால் கடற்கைரையை சுத்தப்படுத்தும் பணி சுணக்கமாக உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. மெரினா, எலியட்ஸ் போன்ற கடற்கரைகளில் தூய்மைப் பணிக்கு கூடுதல் ஆட்கள் தேவை என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. அத்துடன், கண்காணிப்புப் பணியும் அவசியமாகிறது.
இது குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் ஜியோ கூறுகையில் "இதில் பொதுமக்கள் காரணமாக இருந்தாலும் அவர்களை மட்டுமே குறைகூற முடியாது. மேலும் இங்கு அரசாங்கத்தின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது. ஏனெனில், நெகிழிக் குப்பைகளைப் பற்றி விழிப்புணர்வு கொண்டுவருவது மட்டும் இல்லாமல், அடிப்படையில் நெகிழி பொருட்களின் உற்பத்தியையும் பயன்பாட்டையும் கட்டுப்படுத்த வேண்டும்.
ஒருமுறை நெகிழி போன்ற குப்பைகள் உற்பத்தியானால் அதற்கு அழிவே கிடையாது எல்லாவிதமான நெகிழிகளையும் 100% மறுசுழற்சி செய்வது இயலாத ஒன்று. அவை பிரித்து எடுத்து எரிப்பதனால் காற்றிலும் அதன் துகள்கள் குடிநீர் மற்றும் நிலப்பரப்பில் கலந்து நச்சுத் தன்மையுடன் மீண்டும் வெவ்வேறு பரிணாமத்தில் தீங்கினை விளைவிக்கும். குப்பையை முற்றிலும் அழிப்பதற்கு உலகிலேயே எந்த ஒரு கருவியும் அல்லது ஏந்திரமும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.
ஒரு பக்கம் அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிப் பேசினாலும் மற்றொரு புறம் பொருளாதார காரணங்களுக்காக நெகிழி பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனையைத் தடுப்பதில் மும்முரம் காட்டவில்லை என்றே கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.
தனிமனித ஒழுக்க தவறுகளால் மெரினா தொடர்ந்து குப்பைப் படலமாக மாறி வருகின்றது. இதனைத் தடுப்பதற்கு முதல் படி சுய ஒழுக்கமும், சமூக பொறுப்பும். இவற்றை பின்பற்றினாலே பொது இடங்களில் நம்மால் நடந்தேறும் சுற்றுச்சூழல் மாசுகளை தடுக்க முடியும். பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போட்டலே தூய்மையான மெரினா கடற்கரையை உருவாக்கலாம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.