உதகை: உதகை அருகே மேல் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் விசித்ரா. இவர், ஆடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார். நேற்று தனது குடியிருப்பின் அருகே மேய்ச்சலுக்கு ஆடுகளை அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது மேய்ச்சல் நிலத்தை ஒட்டி அமைந்துள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 சிறுத்தைகள், ஆடுகளை நோக்கி வேகமாக ஓடி வந்தன. இதை தூரத்தில் இருந்து பார்த்து அதிர்ச்சியடைந்த விசித்ரா, புதரில் மறைந்து கொண்டார். அங்கு வந்த 2 சிறுத்தைகள் ஆடுகளை வேட்டையாடி, வாயில் கவ்விச் சென்றன.
விசித்ராவின் அலறல் சத்தத்தில், ஒரு சிறுத்தை ஆட்டைவனப்பகுதிக்குள் கவ்விச் சென்றது. மற்றொரு சிறுத்தை மேய்ச்சல் நிலத்தில் ஆட்டை விட்டுவிட்டு வனப்பகுதிக்குள் சென்றது. இதில், மேலும் சில ஆடுகளுக்கு லேசாக காயம் ஏற்பட்டது.
இது குறித்து குடியிருப்பு வாசிகள் கூறியதாவது: கடந்த சிலஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் மனித - விலங்கு மோதல் அதிகரித்துவிட்டது. உணவு மற்றும் தண்ணீருக்காக குடியிருப்பு பகுதிக்குள் வன விலங்குகள் அதிகம் வருகின்றன. காந்திநகர் பகுதியை பொறுத்தவரை, நீண்ட நாட்களாக இரவு நேரங்களில் குடியிருப்புகளின் அருகே சிறுத்தைகளின் நடமாட்டம் காணப்பட்டது.
அந்த சமயங்களில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி சென்றன. தற்போது பகல் நேரங்களிலேயே குடியிருப்புகளின் அருகே சிறுத்தைகள் உலா வருவது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தைகளின் நடமாட்டத்தை கண்காணித்து, கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.