மதுரை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, வைகை ஆற்றை சுத்தம் செய்யும் பணியில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.
மதுரை வைகை ஆற்றை பொதுப்பணித் துறை முறையாக பராமரிப்பதில்லை. மாநகராட்சி அன்றாடம் ஆற்றில் குவியும் குப்பையை அப்புறப்படுத்துவதில்லை. ஆற்றில் குப்பையை கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் ஆற்றில் பாலித்தீன், பிளாஸ்டிக் குப்பை, உணவுக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் அதிக அளவு கொட்டப்படுகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுமக்கள், மாநகராட்சி இணைந்து ஆற்றில் குப்பையை அப்புறப்படுத்தினர். அப்போது மூட்டை, மூட்டையாக பாலித்தீன், பிளாஸ்டிக் கழிவுகள் மட்டுமில்லாது மது பாட்டில்களும் ஏராளமாக அப்புறப்படுத்தப்பட்டன.
நேற்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மதுரை வைகை ஆற்றில் பாலித்தீன் குப்பையை சுத்தம் செய்யும் பணி வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்றது. இதில் மணிகண்டன், பார்த்தசாரதி, ரூபி, சேக்மஸ்தான், செந்தில், ஆறுமுகம், லோகநாதன், பகத் சங்கர், வீரையா, ராஜவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.