கோவை: கோவை மாவட்டத்தில் 1.65 லட்சம் ஹெக்டேர்பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. தண்ணீர், உரங்கள் ஆட்கள் பற்றாக்குறை, உற்பத்திக்கு ஏற்பபோதிய வருவாய்கிடைக்காதது போன்ற பல்வேறு இடர்பாடுகளை விவசாயிகள் எதிர்கொள்ளும் சூழலில், தற்போது பார்த்தீனியம் களைச்செடி பரவிதும் விவசாயிகளை பெரிதும் இன்னலுக்கு உள்ளாக்கியுள்ளது. விவசாய நிலங்களில் வளரும் களைச்செடிகளை முற்றிலும் அழிப்பது விவசாயிகளுக்கு எப்போதும் சவாலான பணியாகவே உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியதாவது: பார்த்தீனியம்களைச் செடிகள் பயிர்களின் உற்பத்தியை பாதிக்கின்றன. இச்செடியில் உள்ள துகள்கள் காற்றில் பரவி மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
குறிப்பாக, கால் நடைகளின் ஜீரண உறுப்புகளில் பார்த்தீனியம் களைச் செடிகள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பார்த்தீனியம் செடிகளும், முள் செடிகளும் பயிர்களுக்கு ஊற்றும் தண்ணீரை உறிஞ்சி, பயிர்களை வாடச் செய்து விடுகின்றன. பார்த்தீனியம் விதைகளின் மீது படர்ந்து காணப்படும் ரசாயனப் படலத்தால், இதன் விதைகள் எந்த மண்ணிலும் வேகமாக வளரும் திறன் கொண்டவை. விஷச் செடியாக அறியப்படும் களைச்செடியான பார்த்தீனியம் தற்போது, விளைநிலங்களில் எங்கு பார்த்தாலும் பரவிக் காணப்படுகிறது.
பருவமழைக் காலம் தொடங்க உள்ளது. விவசாயிகள் பயிர் சாகுபடியை தீவிரப்படுத்தும் சூழலில், இந்த பார்த்தீனியம் செடிகள் பயிர்களின் வளர்ச்சியை பாதிக்கும். பார்த்தீனியம் செடிகள் பரவாமல் அழிக்கும்முறை குறித்து விவசாயிகளுக்கு அதிகாரிகள் தெரிவிப்பதில்லை. எனவே, வேளாண் மற்றும் தோட்டக் கலைத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது,‘‘வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறையினரால் முகாம்கள் நடத்தப்படும் போது, பார்த்தீனியம் களைச்செடிகளை அடையாளம் காண்பது எப்படி, அவற்றை எவ்வாறு அழிக்க வேண்டும் என்பன குறித்து தொடர்ச்சியாக அறிவுறுத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பார்த்தீனியம் பூ பூக்கும் தருணத்தில், ஒரு லிட்டர் தண்ணீரில் 2 சதவீதம் உப்பை கலந்து, களைச்செடி மீது அடிக்கும்போது அதன் வளர்ச்சி குறைந்து கருகிவிடும். இந்த கலவையை உபயோகிப்பதால் பயிர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது’’ என்றனர்.