கல்வி

சிபிஎஸ்இ பள்ளிகளில் ‘கட்டாய கல்வி உரிமைச் சட்டம்’ நடைமுறைக்கு வருமா?

இரா.கார்த்திகேயன்

கோவை: கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை தனியார் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகளில் நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மக்களவையில் கடந்த 2009-ம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டம் சட்டமாக இயற்றப்பட்டு, 2010-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் நாட்டில் நடைமுறைப் படுத்தப்பட்டது. உலகில் பல நாடுகள், நூறாண்டுகளுக்கு முன்பே கல்வியை அடிப்படை உரிமை என்று சட்டம் இயற்றிவிட்டன.

ஆனால் விடுதலை பெற்று 60 ஆண்டுகளுக்கு பிறகு தான், இந்தியாவில் இயற்றப்பட்டது. கல்வியை அடிப்படை உரிமை என்று அறிவித்த 135-வது நாடு இந்தியா. வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் குழந்தைகள் அனைவருக்கும் 6 வயது முதல் 14 வயது வரை இலவச கல்வி கிடைக்க வேண்டும் என்பது இதன் அடிப்படை.

          

தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இலவச கல்வி வழங்க வேண்டும் என்ற இந்த சட்டத்தை யாரும் கண்காணிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுகின்றன. அதேபோல மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு தாமதம் உள்ளிட்ட காரணங்களால் இச்சட்டம் நீர்த்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.

தமிழகத்தில் 60 சதவீதம் பேர் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிப்பவர்கள்தான். தமிழ்நாட்டில் உள்ள சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி ஏழை மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் கோவையை சேர்ந்த மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் வே.ஈஸ்வரன்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீதம் ஏழை மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். ஆனால் தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை மாணவர்கள் சேர்க்கப்படுவ தில்லை.

தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவது, மாநில அரசின் பொறுப்பு என்று சிபிஎஸ்இ வாரியம் தெரிவிக்கிறது. வரும் கல்வியாண்டில் சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர்க்கப்படுவதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாநகர் பகுதிகளில் பள்ளியில் இருந்து 5 கி.மீ. வரையும், புறநகர் பகுதியில் பள்ளியில் இருந்து 8 கி.மீ வரையும் வசிப்பிடம் இருந்தா லும், மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். ஆனால் தமிழ்நாடு அரசு வசிப்பிடத்தின் தொலைவை ஒரு கி.மீ. என்று நிர்ணயித்துள்ளது. இதனால் குழந்தைகள் பாதிக்கப்படு கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சு.மூர்த்தி கூறும்போது, “அனைத்து தனியார் சுயநிதிப் பள்ளிகளிலும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் விதியின் அடிப்படையில் பள்ளிக்கு அருகில் வசிக்கும் நலிவுற்ற மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவை சேர்ந்த குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25 சதவீதம் முதல் வகுப்பில் சேர்க்கை வழங்க வேண்டும்.

சமூக மற்றும் பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, வசதி படைத்த குழந்தைகள் பயிலும் தனியார் பள்ளிகளில் பயில வாய்ப்பு அளிப்பதே இந்த சட்ட விதியின் முதன்மை நோக்கம்.

பலவகையான சமூக மற்றும் பொருளாதார பின்னணி கொண்ட குழந்தைகள் ஒரே வகுப்பறையில் இணைந்து பயில்வதன் மூலம், கல்வியில் பாகுபாடற்ற நிலையை உருவாக்க முடியும். ஒற்றுமையுள்ள சமூகத்தை உருவாக்க முடியும்” என்றார்.

கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறியதாவது: அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகள், கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் பட்டியலில் வருகின்றன. ஆனால் சிபிஎஸ்இ பள்ளிகள் தொடர்பாக எந்தவொரு அறிவிப்பும் எங்களுக்கு இல்லை. கட்டாய கல்வி உரிமைச்சட்டம் என்பது அனைத்து பள்ளிகளுக்குமானது என்றாலும், சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகள் தொடர்பான விவரங்கள் எங்களிடம் இல்லை, என்றார்.

கல்வி உரிமைச்சட்ட கண்காணிப்பு அதிகாரிகள் கூறும்போது, “இணையத்தில் நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் தான் விண்ணப்பிக்க இயலும். ஆனால் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகள் தொடர்பாக தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை தான் முடிவு செய்ய வேண்டும்” என்றனர்.

SCROLL FOR NEXT