சென்னை: இந்திய வேலைவாய்ப்புகளில் ஏஐ ஏற்படுத்தும் தாக்கம் குறித்து சென்னை ஐஐடி வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை ஐஐடி வாத்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் கீழ் இயங்கும் செயற்கை நுண்ணறிவு பொறுப்பு மையத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இந்தியாவில் வேலைவாய்ப்புகளில் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஒரு வெள்ளை அறிக்கையை தயாரித்துள்ளனர்.
ஐஐடியில் நடைபெற்ற ஏஐ ஆளுமை தொழில்துறை மாநாட்டின்போது ஐஐடி இயக்குநர் வி.காமகோடி இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.
மனிதர்களின் பணிகளை திறம்பட செய்ய ஏஐ எவ்வாறு உதவுகிறது, தற்போதைய வேலைவாய்ப்புகளை ஏஐ எவ்வாறு மாற்றியமைக்கிறது, புதிய வேலைவாய்ப்புகளை ஏஐ எவ்வாறு உருவாக்குகிறது என்பது குறித்து இந்த வெள்ளை அறிக்கையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
ஏஐ தொழில்நுட்பத்தால் ஏற்படும் வேலையிழப்பு குறித்த அச்சம், புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்காதது பற்றிய கவலைகளையும் இந்த அறிக்கை ஆராய்கிறது.
இந்தியாவில் வேலைவாய்ப்புகளில் ஏஐ ஏற்படுத்தும் தாக்கத்தை பணியின் அடிப்படையில் புரிந்துகொள்ள வேண்டும் என அந்த அறி்க்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து வாத்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு நிறுவனம் மற்றும் செயற்கை நுண்ணறிவு பொறுப்பு மையத்தின் தலைவர் பேராசிரியர் பலராமன் ரவீந்திரன் கூறும்போது, “வேலை வாய்ப்புகளை ஏஐ தொழில்நுட்பம் பறித்துவிடும் என்று பொதுவாக சொல்லப்படும் கருத்து தவறு என்பதை இந்த வெள்ளை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
வேலைகளில் பலவிதமான பணிகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டுமே ஏஐ தொழில்நுட்பத்தால் செய்ய முடியும். இந்த மாற்றங்களால் பயன்பெறுவோர் - பாதிக்கப்படுவோர் யார் என்பதையும் நாங்கள் ஆராய்ந்துள்ளோம்" என்றார்.
செயற்கை நுண்ணறிவு பொறுப்பு மையத்தின் ஆராய்ச்சி இயக்குநர் கோகுல் எஸ்.கிருஷ்ணன் கூறுகையில், "ஏஐ என்பது தனிப்பட்ட ஒரு பணியை செய்து முடிக்கும். அது ஒட்டுமொத்த தொழிலையும் செய்யாது. ஒரு பணியை ஏஐ செய்வதால் அந்த வேலை காணாமல் போய்விடாது" என குறிப்பிட்டார்.