கல்வி

விருதுநகர் ஆதி திராவிடர் நல விடுதிகளுக்கு 8 மாதமாக உணவு செலவுத் தொகை விடுவிக்காததால் சிக்கல்!

அ.கோபால கிருஷ்ணன்

விருதுநகர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் விடுதிகளுக்கு 8 மாதங்களாக உணவு செலவுத்தொகை விடுவிக்கப்படாததால் காப்பாளர்கள் தவித்து வருகின்றனர். இதனால் மாணவர்களுக்கு தொடர்ந்து உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 42 மாணவர்கள் விடுதிகள், 14 மாணவிகள் விடுதிகள் என மொத்தம் 56 விடுதிகள் உள்ளன. இதில் 48 பள்ளி மாணவர் விடுதிகள், 8 கல்லூரி மாணவர் விடுதிகள் உள்ளன.

இந்த விடுதிகள் ஒவ்வொன்றிலும் 50 முதல் 120 மாணவ, மாணவிகள் வரை தங்கி உள்ளனர். விடுதிக்கு தேவையான அரிசி, பருப்பு ஆகியவை நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் வழங்கப்படுகிறது. காய்கறி, முட்டை, இறைச்சி, மளிகை பொருட்கள் வாங்குவதற்கு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,400, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1,500 உணவு செலவினத் தொகையாக எண்ணிக்கைக்கு ஏற்ப வழங்கப்படுகிறது.

ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் அனைத்து விடுதிகளிலும் ஜனவரி 1-ம் தேதி முதல் பயோ மெட்ரிக் முறையில் காலை மற்றும் இரவு என தினசரி இரு முறை மாணவர் வருகையை பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

பயோ மெட்ரிக் பதிவு நேரடியாக சென்னை தலைமை அலுவலகத்தில் பதிவாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயோ மெட்ரிக் வருகை பதிவின் அடிப்படையில் ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர்களுக்கான உணவு செலவுத்தொகை விடுவிக்கப்படுகிறது.

இது வழக்கமான தொகையைவிட குறைவாக உள்ளதால், கடந்த 8 மாதங்களாக விடுதிகளுக்கு உணவு செலவுத் தொகை விடுவிக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. அதே நேரம் பயோமெட்ரிக் இயந்திரம் இல்லாத அல்லது செயல்படாத விடுதிகளில் அதிகாரிகள் ஆய்வின் அடிப்படையில் உணவு செலவுத் தொகை வழங்கியுள்ளனர்.

இதனால் விடுதி காப்பாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 8 மாதங்களாக உணவு செலவுத் தொகை விடுவிக்கப்படாததால், மாணவர்களுக்கு பட்டியலில் உள்ளவாறு உணவுகளை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆதிதிராவிடர் நல விடுதி காப்பாளர்கள் கூறுகையில், பெரும்பாலான விடுதிகளில் அரசாணைப்படி பயோமெட்ரிக் மூலம் மாணவர் வருகையை பதிவு செய்து வருகிறோம்.

புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரம் பயோமெட்ரிக் இயந்திரத்தில் சேர்க்கப்படாதது மற்றும் இணைய பிரச்சினை காரணமாக பதிவு இல்லாத மாணவர்களின் விவரத்தை மேனுவலாக பதிவு செய்து அளித்துள்ளோம். ஆனால், இதையே காரணமாக வைத்து உணவு செலவுத் தொகையை விடுவிக்க மறுக்கின்றனர்.

சென்னை, மதுரை, கோயம்புத்தூரில் ஒருங்கிணைந்த சமையல் கூடத்தில் உணவு தயாரிப்பதற்கு பயோமெட்ரிக் பதிவு இல்லாமல் ஒரு மாணவருக்கு ரூ.2,400 வழங்குகின்றனர். ஆனால், விடுதியில் சமைக்கப்படும் உணவுக்கு மாணவருக்கு ரூ.1,500 ஒதுக்கும் நிலையில், பயோ மெட்ரிக் பதிவை காரணம் காட்டி 8 மாதங்களாக உணவு செலவுத் தொகையை விடுவிக்காமல் உள்ளனர்.

பல காப்பாளர்கள் தங்களது சேமிப்பு பணத்தில் இருந்தும், நகையை அடகு வைத்தும் மாணவர்களுக்கு உணவு வழங்கி வருகிறோம். இதில் அரசு தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும், என்றனர்.

SCROLL FOR NEXT