வகுப்பறைக்கும் உலாவும் நாய், பல்கலைக்கழக வளாகத்தில் மேயும் பன்றி, வகுப்பறையில் கம்பியில் செல்லும் பாம்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் மிக முக்கிய அரசு கல்வி நிறுவனங்களில் ஒன்றாக புதுச்சேரி பொறியியல் கல்லூரி விளங்கியது. இக்கல்லூரி தற்போது புதுச்சேரி தொழில் நுட்ப பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டு துணைவேந்தர் நியமிக்கப் பட்டார்.
ஆனால் அதன்பிறகு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தரம் சரிந்தது. குறிப்பாக தரவரிசை பட்டியலில் சிறப்பிடம் பெற்று வந்த இக்கல்வி நிறுவனம் தற்போது மிகவும் சரிவில் உள்ளது. மத்திய அரசின் உயர்கல்வி நிறுவன தரவரிசை பட்டியலிலும் சரிந்துள்ளது.
கடந்த கல்வியாண்டு புதுச்சேரி தொழில் நுட்பப் பல்கலைக்கழகம் 201-லிருந்து 300-வது இடத்தைப் பெற்றுள்ளது. நாட்டின் முதல் 100 பொறியியல் கல்லூரி களில் கூட இந்த மாநில தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இடம் பெறவில்லை.
பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும், பல்கலைக் கழகத்தின் நிர்வாகக் குழுவை புதுச்சேரி அரசு அமைக்காதது அந்நிறுவனத்தின் செயல்பாடுகளைக் குறைத்துள்ளதாக கல்வியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இக்கல்லூரியில் பேராசிரியர்கள் பற்றாக்குறை, ஆய்வகம், கழிப்பறை, வகுப்பறை ஆகியவை மோசமான நிலையில் உள்ளன. இதுபற்றி மாணவர்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
பட்டம் வழங்காததால் பாதிப்பு: இதுபற்றி மாணவர்கள் தரப்பில் கூறுகையில், “பல்கலைக்கழக வளாகம் முழுக்க குப்பையால் குவிந்துள்ளன. வளாகத்தில் பன்றிகள் மேய்கின்றன.
வகுப்புகள் நடக்கும்போதே நாய்கள் உலா வருகின்றன. வகுப்பறைக்குள் சர்வ சாதாரணமாக நுழைந்து செல்கின்றன. அதற்கும் மேலே வகுப்பறைக்குள் பாம்புகள் நடமாட்டமும் உள்ளன. உயிர் அச்சத்துடன் படிக்க வேண்டியுள் ளது. பல்கலைக்கழக லேப் மிகவும் மோசமாகஉள்ளது. நிதி ஒதுக்கியும் அதை சரிசெய்வதில்லை.
தொழில்நுட்ப பல்கலைக்கழக கட்டிடத்தில் சிதறிக் கிடக்கும் குப்பைகள்.
பயன்படுத்தவே முடியாத சூழலில் கழிப்பறைகள் இருக்கின்றன. பல வகுப்புகளில் ஆசிரியர்கள் இல்லாததால் நாங்களே படித்துதான் தேர்வுகளை சந்திக்கிறோம். மாநில அரசின் பல்கலைக்கழகத்தை ஆளுநரும், முதல்வரும், கல்வியமைச்சரும், கல்வித்துறை உயர் அதிகாரிகளும் கண்டுகொள் வார்களா? படித்து முடித்த மாணவர்களுக்கு கடந்த 2022 முதல் பட்டங்களை தராததால் பலரும் பணிக்கு சேர்ந்தும் பாதிக்கப்படுகிறோம்” என்று குறிப்பிடுகின்றனர்.
இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை மாநில செயலாளர் சலீம் கூறுகையில், “புதுவை பொறியியல் கல்லூரி சிறந்து விளங்கியாதால் அடுத்தகட்டமாக புதுவை தொழில் நுட்ப பல்கலைக்கழகமாக மாறியது. பொறியியல் பல்கலைக்கழக கட்டிடத்தை சுற்றி பல ஏக்கர்களில் மாமரங்கள், தென்னை மரங்கள் போன்ற மரங்கள் இருந்தன.
இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு குடியிருப்பு கட்டிடம்,சாலைகள், கழிவுநீர், கழிப்பிடங்கள் சுத்தமாக பராமரிப்பு செய்யப்பட்டது. ஆனால் இப்போது பொறியியல் பல்கலைக்கழகம் பாழ டைந்து உள்ளது. சோலைவனம் போல இருந்த பொறி யியல் கல்லூரி பாலைவனம் போல் ஆகி விட்டது. இதை தடுப்பதற்கு நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
சீரழியும் உயர்கல்வி நிலையத்தை சீர்படுத்தி சிறந்த கல்வி நிலையமாக மாற்ற அரசு நிதி ஒதுக்கி காலி பணியிடங்களையும் நிரப்பி சுற்றுச்சூழலை மேம்படுத்தி தரமான கல்வியை அளிப்பதற்கு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.