கல்வி என்பது வெறும் பாடப் புத்தகங்களை வாசிப்பது மட்டுமல்ல. ஒரு பெண் தன் சுயமரியாதையுடனும் கண்ணியத்துடனும் வாழக் கற்றுக் கொடுப்பதும்தான். பல தசாப்தங்களாக, இந்தியப் பள்ளிகளில் கழிப்பறை வசதியின்மை என்பது பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்கு எதிரான மவுனச் சுவராக இருந்தது. குறிப்பாக, பருவமடைந்த மாணவிகள் மாதவிடாய் நாட்களில் எதிர்கொண்ட அவஸ்தைகளும் மன உளைச்சலும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை.
இன்று, இந்தியப் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கான தனிக் கழிப்பறை வசதி 95%-க்கும் மேல் எட்டப்பட்டுவிட்டது என்ற செய்தி, வெறும் உள்கட்டமைப்பு சாதனை மட்டுமல்ல. அது நமது பெண் குழந்தைகளுக்கு நாம் மீட்டுக் கொடுத்துள்ள கண்ணியமான கல்விச் சூழல் ஆகும்.
கழிப்பறை என்பது ஒரு மனிதனின் அடிப்படைத் தேவை. ஆனால், அதுவே ஒரு பெண் குழந்தையின் வாழ்வையோ அல்லது எதிர்காலத்தையோ தீர்மானிக்கும் காரணியாக மாறிய காலம் இருந்தது. கழிப்பறை இல்லாததால் பள்ளிக்குச் செல்லத் தயங்கிய மாணவிகள், தாகம் எடுத்தும் சுகாதாரமான குடிநீர் இல்லாததால் அருந்தாமல் தாகத்தைக் கட்டுப்படுத்திக்கொண்ட சிறுமிகள் எனப் பல வேதனையான பக்கங்கள் நம் வரலாற்றில் உண்டு.
2014-க்குப் பிறகு பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான அரசால் கொண்டுவரப்பட்ட ‘ஸ்வச் பாரத் மிஷன்’ மற்றும் பள்ளிகளுக்கான ‘ஸ்வச் வித்யாலயா இயக்கம்’ போன்ற தூய்மைப் பணிகளின் விளைவாக, இன்று இந்தியப் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கான கழிப்பறை வசதி ஏறத்தாழ முழுமையடையும் தருவாயில் இருக்கிறது.
பெண் குழந்தைகள் கல்விக்கான தடைக்கற்கள் உடைந்தன. புதிய கதவுகள் திறந்தன. இனி எந்தவொரு பெண் குழந்தையும் சுகாதாரமின்மையைக் காரணம் காட்டி படிப்பைப் பாதியில் நிறுத்த வேண்டியதில்லை என்ற சூழல் உருவாகியுள்ளது.
2014 - 2025: ஓர் ஒப்பீடு
2014 அக்டோபர் 2-ல் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட ‘ஸ்வச் பாரத் மிஷன்’ திட்டத்துடன், பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்குத் தனித்தனி கழிப்பறை வசதி செய்யும் ஸ்வச் வித்யாலயா திட்டமும் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டம் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அதன் இலக்குகள் ஏறக்குறைய நிறைவேறியுள்ளன.
உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெஃப் (WHO/UNICEF) கூட்டு கண்காணிப்பு ஆய்வின்படி வெளியான தகவல்களைப் பார்ப்போம்.
குடிநீர் வசதி: 2015-ல் மாணவர்களுக்கான அடிப்படை குடிநீர் வசதி 55% ஆக இருந்த நிலையில், 2025-ஆம் ஆண்டில் 97% ஆக உயர்ந்துள்ளது. (164 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 5 நாடுகள் மட்டுமே வேகமாக இந்தத் துறையில் முன்னேறியுள்ளன. அதில் இந்தியாவும் ஒன்று)
கழிப்பறை வசதி: 2014-ல் பள்ளிகளில் கழிப்பறை வசதி 67% ஆக இருந்த நிலையில், தற்போது 98% என உயர்ந்துள்ளது. கழிப்பறை இல்லாத பள்ளிகள் 2014-ல் 27 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 14% ஆகக் குறைந்துவிட்டது.
உலக சராசரியாகக் கழிப்பறை வசதி 75%, குடிநீர் வசதி 80% என்ற அளவில் இருக்க, இந்தியா அதைவிட மேலோங்கி உள்ளது.
மத்திய கல்வி அமைச்சகத் தகவலின்படி, 14.56 லட்சம் பள்ளிகளில் மாணவிகளுக்கான தனிக் கழிப்பறை வசதி 99% நிறைவேற்றப்பட்டுள்ளது. 2014-ல் 40% கழிப்பறைகளே செயல்பாட்டில் இருந்த நிலை மாறி, இப்போது 92% கழிப்பறைகள் பயன்பாட்டில் உள்ளன.
கல்விசார் வசதியாகக் கழிப்பறை
2017-ல் பொருளாதார நிபுணர் அஞ்சலி அடுகியா நடத்திய ஆய்வில், தனிக் கழிப்பறைகள் அமைக்கப்பட்ட பின் பருவமடைந்த மாணவிகளின் பள்ளிச் சேர்க்கை அதிகரித்து, இடைநிற்றல் கணிசமாகக் குறைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கல்வி அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் 95%-க்கும் அதிகமான பள்ளிகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. மாணவிகளுக்கான தனிக் கழிப்பறை வசதி தேசிய அளவில் 95% முதல் 97% என்ற அளவை எட்டியுள்ளது. 1.5% பள்ளிகளில் மட்டுமே கழிப்பறை வசதி இல்லை; 2.7% பள்ளிகளில் கழிப்பறை இருந்தும் புனரமைக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது.
ஒருங்கிணைந்த பள்ளித் தகவல் முறைமை (UDISE+) தரவுகளின்படி, 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பெண் குழந்தைகளின் இடைநிற்றல் 8.3%-லிருந்து 6.7% ஆகக் குறைந்துள்ளது.
டீன் மாணவிகளுக்கான பாதுகாப்பு
மறைவிடம் இல்லாத கழிப்பறைகள் மாணவிகளுக்கு மன உளைச்சலையும் நோய்களையும் ஏற்படுத்தின. 2014-க்குப் பின் அரசுப் பள்ளிகளில் கட்டப்பட்ட லட்சக்கணக்கான தனிக் கழிப்பறைகளும், இலவச சானிட்டரி நாப்கின் திட்டங்களும் மாணவிகளின் வருகையை உயர்த்தின. இதனால், உள்கட்டமைப்பு இன்மையால் 23% ஆக இருந்த இடைநிற்றல் தற்போது 8% ஆகக் குறைந்துள்ளது.
குறைந்த இடைநிற்றல் விகிதம்
தொடக்கப்பள்ளி இடைநிற்றல்: 2013-14-இல் 5% ஆக இருந்தது, தற்போது 1.4% ஆகக் குறைந்துள்ளது.
நடுநிலைப்பள்ளி இடைநிற்றல்: 4% ஆக இருந்தது, தற்போது 3% ஆக குறைந்துள்ளது.
உயர்நிலைப் பள்ளி இடைநிற்றல்: 17.8% ஆக இருந்தது, தற்போது 8% ஆகக் குறைந்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெஃப் அமைப்பின் ‘வாஷ்’ (WASH) தரவரிசையின்படி, அடிப்படை கழிப்பறை வசதியில் உலகளவில் 100-க்கு 89 புள்ளிகளுடன் இந்தியா உயர்ந்த இடத்தில் உள்ளது. சுத்தமான குடிநீர் வழங்குதலில் இந்தியப் பள்ளிகள் 95% என்ற அளவை எட்டியுள்ளன.
கழிப்பறை பராமரிப்பு நிலை
81% கழிப்பறைகள் மட்டுமே சரியாகப் பராமரிக்கப்படுவதாக யுனிசெஃப் அறிக்கை கூறுகிறது. சோப்பு, தண்ணீர் வசதியுடன் கூடிய முழுமையான சுகாதார அளவீட்டில் இந்தியா 53% அளவிலேயே உள்ளது. பராமரிப்புச் சீரின்மையைச் சரிசெய்ய வேண்டிய அவசியம் இன்னும் உள்ளது.
இனி செய்ய வேண்டியவை:
பராமரிப்பு நிதி: கழிப்பறை பராமரிப்புப் பணிகளுக்கென தனியாகக் கட்டாய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
சமூகப் பங்களிப்பு: பெற்றோர் - ஆசிரியர் கழகம் மூலம் சுகாதார வசதிகளை ஆய்வு செய்து ஆண்டறிக்கையில் வெளியிட வேண்டும்.
மாதவிடாய் சுகாதாரம்: நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் மற்றும் எரியூட்டி இயந்திரங்களை (Incinerators) பரவலாக நிறுவ வேண்டும்.
10 ஆண்டுகளில் கழிப்பறைகளை அமைப்பதில் வெற்றி கண்ட ஸ்வச் பாரத் இயக்கம், அடுத்தகட்டமாக அவற்றைத் தூய்மையாகப் பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு பெண் தன் சுயமரியாதைக்கும் கல்விக்கும் இடையே ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் இனி என்றும் ஏற்படக்கூடாது என்பது கல்வி ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.