கல்வி

போட்டித் தேர்வு பாடத் திட்டத்தில் மாற்றம் இல்லை: டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தகவல்

ஜெ.கு.லிஸ்பன் குமார்

சென்னை: வரும் 2026-ம் ஆண்டுக்கான போட்டித் தேர்வுகள் அனைத்தும் தற்போதைய பாடத்திட்டத்தின்படியே நடத்தப்படும். பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

2026-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி சமீபத்தில் வெளியிட்டது. அதில், குரூப்-4, குரூப்-2, குரூப்-1, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வுகள் உட்பட மொத்தம் 6 போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. தேர்வு அறிவிப்பு எப்போது வெளியிடப்படும், தேர்வு எப்போது நடத்தப்படும் ஆகிய விவரங்கள் இதில் உள்ளன.

வழக்கமாக, என்னென்ன பதவிகள் நிரப்பப்படும் என்ற விவரமும் இருக்கும். இந்த முறை அத்தகைய விவரங்கள் இல்லை. இதனால், தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதேபோல, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றப்படலாம் என்றும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகின்றன.

இது குறித்து கேட்டபோது, டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் கூறியது: “பொதுவாக, அரசுத் துறைகளைப் பொறுத்தவரை, நிதி ஆண்டின் கடைசியில்தான் (மார்ச்) காலி இடங்கள் விவரம் கணக்கெடுக்கப்படும். சில துறைகளில் கட்-ஆஃப் தேதி வேறு மாதமாக இருக்கும்.

குரூப்-4, குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகளில் இடம்பெறும் பதவிகள் தேர்வர்களுக்கு பெரும்பாலும் தெரிந்திருக்கும். அதேநேரம், தொழில்நுட்பத் தேர்வுகளில் காலி இடங்கள் அதிகம் வருவதில்லை. பெரும்பாலான பதவிகளில் காலி இடங்கள் ஒற்றை இலக்கத்தில்தான் இருக்கும்.

முன்பு 2-3 ஆண்டுகளுக்கான காலி பணியிடங்களுக்கு சேர்த்து தேர்வு நடத்தப்பட்டன. தற்போது அந்தந்த நிதி ஆண்டுக்கான காலி இடங்கள் அனைத்தும் குறிப்பிட்ட ஆண்டிலேயே நிரப்பப்பட்டு விடுகின்றன. அதனால், காலி இடங்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதுபோல தெரியலாம்.

குறிப்பிட்ட தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும்போது, என்னென்ன பதவிகள், எத்தனை காலி இடங்கள் என்ற முழு விவரமும் இடம்பெறும். புதிய பதவிகள் சேர்ந்தாலோ, காலி இடங்கள் எண்ணிக்கை அதிகரித்தாலோ பிற்சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்படும்.

தேர்வர்கள் வருடாந்திர தேர்வு அட்டவணையை அடிப்படையாக வைத்து, பொதுவான கல்வித் தகுதி கொண்ட தேர்வுகளுக்கும், தாங்கள் கூடுதலாக பெற்றுள்ள சிறப்பு கல்வித் தகுதி உடைய தேர்வுகளுக்கும் முன்கூட்டியே தயாராவது நல்லது.

பாடத்திட்டத்தை பொறுத்தவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 2026-ம் ஆண்டுக்கான போட்டித் தேர்வுகள் அனைத்தும் தற்போதைய பாடத்திட்டத்தின்படியே நடத்தப்படும்” என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT