கோப்புப் படம்
சென்னை: உதவி பேராசிரியர் தேர்வுக்கு முதுநிலை ஆசிரியர்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் பொ.அன்பழகன் வெளியிட்ட அறிக்கை விவரம்: ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் நடைபெறும் அனைத்து தேர்வுகளுக்கும் முதுநிலை ஆசிரியர்களை மட்டுமே பயன்படுத்துகிறீர்கள்.
அதேபோல், பள்ளிக் கல்வித் துறையில் நடைபெறும் மேலாண்மை பணிகள், மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி, நான் முதல்வன், தமிழ் புதல்வன், புதுமைப்பெண் திட்டம், திறன் மேம்பாட்டு பயிற்சி உட்பட பல்வேறுபணிகளிலும் முதுநிலை ஆசிரியர்களே பயன்படுத்தப்படுகிறார்கள். இதனால் ஆசிரியர்களால் கற்றல், கற்பித்தல் பணிகளை சுதந்திரமாக மேற்கொள்ள முடியவில்லை.
இந்நிலையில், விரைவில் நடத்தப்படவுள்ள கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வுக்கும் முதுநிலை ஆசிரியர்களை பயன்படுத்துவது ஏற்புடையதல்ல.
மேலும், ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பாக காலவரையற்ற வேலை நிறுத்தத்துக்கான ஆயத்த மாநாடு டிசம்பர் 27-ல் நடைபெற இருக்கிறது. அன்றைய தினமே தேர்வும் நடைபெறுவதால் இந்த விவகாரத்தில் பள்ளிக் கல்வித் துறையும் உடனே நடவடிக்கை எடுத்து முதுநிலை ஆசிரியர்களை அந்த பணியில் இருந்து விடுவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.