கோப்புப் படம்
சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று வெளியிடுகிறார்.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் 13,999 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் உள்ள அரசு, நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) நடத்தி வருகிறது.
அதன்படி, எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 2026-27-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன
நீட் தேர்வில் தமிழகத்தில் 61,306 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 41,723 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 30,904 பேரும் என மொத்தம் 72,627 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) அலுவலகத்தில் தகுதியான மாணவர்களின் தரவரிசைப் பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் வெளியிடுகிறார்.
நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீதம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்தியஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த இடங்கள் மற்றும் எய்ம்ஸ், ஜிப்மர், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவக் கலந்தாய்வு குழு (எம்சிசி) ஆன்லைனில் நடத்தி வருகிறது.
அதன்படி, நடப்பாண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு முதல் சுற்று ஆன்லைனில் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள 85 சதவீத எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான இடங்களுக்கு கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) நடத்துகிறது. நடப்பாண்டு முதல் சுற்று கலந்தாய்வு 13-ம் தேதி ஆன்லைனில் தொடங்கவுள்ளது.
மாற்றுத்திறனாளி மாணவர்கள்: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் மாநில இடஒதுக்கீட்டுக் கொள்கையின்படி மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், ஓய்வுபெற்ற ராணுவத்தினரின் வாரிசுகள், அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகள் பிரிவின் கீழ் விண்ணப்பித்தவர்கள், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் இயங்கும் மருத்துவ மதிப்பீட்டு வாரியங்களால் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகள் தகுதி சான்றை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கான அவகாசம் ஆகஸ்ட் 11-ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.