* 1950களில் நாட்டில் எழுத்தறிவு 12 சதவீதமாகவும் மதராஸ் மாகாணத்தில் சுமார் 20 சதவீதமாகவும் இருந்தது. அதற்கடுத்த பதினைந்து ஆண்டுகளில் எழுத்தறிவு இரு மடங்கானதற்குக் காரணம், ‘கல்வி வளர்ச்சியே சமூக மேம்பாட்டுக்கு அடிப்படை’ எனும் நோக்கில் அப்போதைய முதலமைச்சர் காமராஜர் செயல்பட்டதே!
* காமராஜர் முதலமைச்சர் ஆன பிறகு, மாநிலம் முழுவதும் ‘மதிய உணவுத் திட்டத்தை’ விரிவுபடுத்தினார். ஏழை எளியவர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பத் தயங்கிய காலத்தில், இதனைப் புரட்சி என்றே சொல்ல வேண்டும். எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் அது சத்துணவுத் திட்டமாக விரிவு பெற்றது.
அதன்பின் வந்த ஆட்சியாளர்களால் உணவின் உள்ளடக்கமும் தரமும் விரிந்தன. இன்று கர்நாடகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்கள் இத்திட்டங்களைப் பின்பற்றிவருவது, தமிழகம் அவற்றால் பெற்ற பலன்கள் எப்படிப்பட்டது என்பதைச் சொல்லிவிடும்.
* காமராஜரின் ஆட்சிக் காலத்தில்தான் ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கப்பட்டது.
ஒடுக்கப்பட்ட நிலையிலிருந்த மக்கள் கல்வி பெறும் வகையில் இட ஒதுக்கீடு செயல்படுத்தப்பட்டது. கற்றலைப் பொறுத்தவரை அனைவரும் சமம் என்பதை உணர்த்த, சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
* கருணாநிதி முதலமைச்சராக இருந்து 2006 – 2011 கல்வியாண்டுகளின்போது கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வித்திட்டம், அனைவருக்கும் இலவசப் பாடப்புத்தகங்கள், பேருந்துப் பயண அனுமதிச்சீட்டு போன்றவை குறிப்பிடத்தக்க மாற்றங்களை விதைத்தன. பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விச் சேர்க்கைக்கான பொது நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது கிராமப்புற மாணவர்கள், பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
* 69% இட ஒதுக்கீடு, பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப், சிறப்புப் பிரிவுகளில் பயிற்சி, மாணவர்கள்- ஆசிரியர்களின் வெளிநாட்டு ஆய்வு மற்றும் பயணம் உள்ளிட்டவை ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த கல்வி மாற்றங்கள்.
* அடுத்தடுத்த ஆட்சியாளர்களால் மாணவர்கள் கல்வி பெறுவதற்கான வசதி வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டதும், அதற்கடுத்த தலைமுறையினர் அவற்றினால் அடைந்த சமூகப் பொருளாதார ஏற்றமும் தமிழகத்தின் இன்றைய நிலை என்னவென்று சொல்லும்.
கடந்த எழுபதாண்டுகளில் உலகம் முழுக்கக் கல்வி குறித்த சிந்தனைப் போக்கு தொடர்ந்து ஏற்றம் கண்டபோதும், கல்வித் துறையில் தமிழகம் எட்டியுள்ள உயரம் வியக்கத்தக்கது. அதற்கான விதையிட்டவர்களில் முதன்மையானவர், காமராஜர்.
- மாபா