உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன்
சென்னை: பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் ஜூலை 1-ம் தேதி வெளியிடப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பி.விஸ்வநாதன் அறிவித்துள்ளார். முன்னதாக, தரவரிசை பட்டியல் ஜூன் 29-ம் தேதி அன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக துறைசார் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் வழங்கப்படும் பிஇ, பிடெக் படிப்புகளில் ஏற்ததாழ ஒரு லட்சத்து 80 ஆயிரம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகும். இவை ஒற்றைச்சாளர முறையில் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த கலந்தாய்வை தமிழக அரசு சார்பில் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
2.23 லட்சம் மாணவ-மாணவிகள்: அந்த வகையில், நடப்பு கல்வி ஆண்டில் (2026-2027) அரசு ஒதுக்கீட்டு பிஇ, பிடெக் இடங்களில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மே 3-ம் தேதி தொடங்கி, ஜூன் 5-ம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 2.23 லட்சம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் பதிவேற்றம் செய்த சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை ஆன்லைனில் சரிபார்க்கும் பணி ஜூன் 8-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பணி வருகிற 29-ம் தேதியுடன் முடிவடைகிறது. அன்றைய தினம் தரவரிசை பட்டியல் வெளியிடப்படு்ம் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் முன்பு அறிவித்திருந்தது.
இந்நிலையில், தரவரிசை பட்டியல் வெளியிடும் நாள் ஜூலை 1-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் பி.விஸ்வநாதன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீட்டு முடிவுகள் ஜூன் 21 முதல் படிப்படியாக வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஜூன் 29-ம் தேதி அன்று வெளியிட இருந்த பொறியியல் தரவரிசை பட்டியல் ஜூலை 1-ம் தேதி அன்று வெளியிடப்படும்.
அன்றைய தினம், பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதிகளும் அறிவிக்கப்படும். தரவரிசை பட்டியலில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அவற்றை சரிசெயவ்தற்கு ஜூலை 1 முதல் 5 வரை காலஅவகாசம் அளிக்கப்படும். இந்த கால கட்டத்தில் மாணவர்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்துகொள்ள தங்கள் இருப்பிடத்துக்கு அருகேயுள்ள தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை சேவை மையத்தை (TFC) நேரில் அணுகலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.