கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் மற்றும் வேளாண் தொழில்நுட்ப படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மை பிரிவுக்கும் ஒரே இணையதள விண்ணப்பம் வழியாக இளமறிவியல் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.http://tnau.ucanapply.com என்ற ஒருமித்த இணையதள விண்ணப்பத்தின் மூலம் வரும் ஜூன் 8-ம் தேதி வரை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
மாணவர் சேர்க்கைக்கான வழிமுறைகள், கலந்தாய்வுக்குரிய தேதி மற்றும் செயல்முறைகள் அனைத்தும் உடனுக்குடன் இணையத்தில் வெளியிடப்படும். இளமறிவியல் வேளாண்மை, தோட்டக்கலை படிப்புகளுக்கு தமிழ் வழியிலும் விண்ணப்பிக்கலாம். வனவியல், உணவு மற்றும் ஊட்டச்சத்து உணவு முறை, பட்டு வளர்ப்பு, வேளாண் வணிக மேலாண்மை ஆகிய இளமறிவியல் பாடங்களும், வேளாண்மை தொழில்நுட்பக் கல்வி பாடப்பிரிவுகளான வேளாண் பொறியியல், உணவுதொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல், உயிரித் தகவலியல் மற்றும் வேளாண்மை தகவல் தொழில்நுட்பம் ஆகிய 14 இளமறிவியல் பட்டப்படிப்புகளுக்கு ஒரேயொரு இணைய வழி விண்ணப்பம் மட்டும் போதுமானது.
சேர்க்கை எண்ணிக்கை: வரும் கல்வியாண்டில் உறுப்பு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான எண்ணிக்கை 2,516 ஆகவும், இணைப்பு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 4,736 ஆகவும் இருக்கும். இதில் அரசாங்க இடஒதுக்கீடு 3,051 மற்றும் மேலாண்மை இடஒதுக்கீடு 1,685 ஆகும். சிறந்த விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், மாற்றுத் திறனாளிகள், அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கான 7.5 சதவீதம், தொழில்முறை கல்வி பாடப்பிரிவு, மூன்றாம் பாலினத்தவர் மற்றும் அயலக வாழ் தமிழர்கள் என சிறப்பு ஒதுக்கீட்டுக்கான சேர்க்கை நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம் பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ரூ.600, ஆதிதிராவிடர், அருந்ததியர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.300 ஆகும். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பாடங்களுக்கான விவரங்களை 9488635077, 9486425076 என்ற செல்போன் எண்களிலும், ugadmissions@tnau.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும், வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொண்டு அறியலாம்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் வேளாண்மை, வேளாண்மை சுயசார்பு மற்றும் தோட்டக்கலை பிரிவில் 340 இடங்கள் உள்ளன. இந்த பாடங்களுக்கான விவரங்களை 9865703537, 9442029913 என்ற செல்போன் எண்களிலும், agridean2015@gmail.com மூலமாகவும் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.