புதுடெல்லி: மும்மொழி திட்டத்திலிருந்து 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென, சிபிஎஸ்இ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசியக் கல்விக் கொள்கை 2020 மற்றும் தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு 2023 ஆகியவற்றின்படி, 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்கள் 2 இந்திய மொழிகள் உட்பட 3 மொழிகளைக் கற்க வேண்டுமென கடந்த மே 15-ம் தேதி சிபிஎஸ்இ சுற்றறிக்கை வெளியிட்டது.
முன்னதாக, ஏப்ரல் 9-ம் தேதி சுற்றறிக்கையில் இந்த நடைமுறை 2029-30 கல்வியாண்டு வரை ஒத்தி வைக்கப்பதாகக் கூறப்பட்ட நிலையில், திடீரென மும்மொழித் திட்டம் உடனடியாகக் அமலாக்கப்படுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இவ்வழக்கில் மத்திய அரசின் வாதத்தை நிராகரித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, “மாணவர்களின் கல்விச் சுமையை கருத்தில் கொண்டு மும்மொழிக் கொள்கையை படிப்படியாக அமல்படுத்த வேண்டும்.
மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. அவர்களுக்கு தேவையான வசதியைத்தான் வழங்க விரும்புகிறோம். நடப்பாண்டு 7, 8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலக்கு 6-ம் வகுப்புக்கும் பொருந்தும்” என தெரிவித்து, அதனைச் செயல்படுத்த சிபிஎஸ்இ-க்கு உத்தரவிட்டது.