தமிழகத்தை சேர்ந்த ஷில்பா சுரேஷ் உள்ளிட்ட 3 மாணவிகளுக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளி்ல் இடம் கிடைத்த நிலையில், ரூ.15 லட்சம் கட்டணத்தை நவ.8-ம் தேதிக்குள் செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டது.
ஆனால், தொழில்நுட்பக் கோளாறு, வங்கி விடுமுறை காரணமாக அந்த அவகாசத்துக்குள் அவர்களால் கட்டணத்தை செலுத்த முடியவில்லை. இதனால், அவர்களுக்கு சேர்க்கை மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து 3 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 3 மாணவிகளும் நவ.14-ம் தேதிக்குள் கட்டணத்தை செலுத்த அவகாசம் வழங்கி உத்தரவி்ட்டார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
இதை எதிர்த்து 3 மாணவிகளும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஏ.எஸ்.சந்துர்கர் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
"மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைப்பதே கடினமான காரியமாக உள்ளது. இந்த சூழலில், தொழில்நுட்பக் கோளாறு, வங்கி விடுமுறை காரணமாக கல்லூரி கட்டணத்தை குறிப்பிட்ட கெடுவுக்குள் செலுத்த முடியாத காரணத்தால் மாணவிகளின் எதிர்காலம் பாழாகிவிடக் கூடாது.
எனவே, பாதிக்கப்பட்டுள்ள 3 மாணவிகளும் சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கு வரும் டிச.10-ம் தேதிக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும்" என்று அவகாசம் வழங்கி, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை நீதிபதிகள் உறுதி செய்தனர். கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு, 3 மாணவிகளுக்கும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவி்ட்டுள்ளனர்.