படங்கள்: ர.செல்வமுத்துகுமார்

கல்வி

‘திறமை, அர்ப்பணிப்புடன் தயாரானால் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி நிச்சயம்!’

‘இந்து தமிழ் திசை’, கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டி நிகழ்ச்சியில் இந்திய அரசின் பாதுகாப்பு கணக்கு கட்டுப்பாட்டாளர் த.ஜெயசீலன் அறிவுரை

செய்திப்பிரிவு

திருச்சி: திறமைகளை வளர்த்துகொண்டு, அர்ப்பணிப்புடன் தயாரானால் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி நிச்சயம் என இந்திய அரசின் பாதுகாப்பு கணக்கு கட்டுப்பாட்டாளர் த.ஜெயசீலன் அறிவுறுத்தியுள்ளார்.

‘இந்து தமிழ் திசை’, கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சார்பில், `உனக்குள் ஓர் ஐஏஎஸ்' எனும் போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி கலையரங்கில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கி, இந்திய அரசின் பாதுகாப்பு கணக்கு கட்டுப்பாட்டாளர் த.ஜெயசீலன் பேசியது: திருச்சியில் உள்ள தந்தை பெரியார், ஜமால் முகமது கல்லூரிகளில் படித்து முடித்த நான், குடும்ப வறுமை காரணமாக குறைந்த ஊதியத்தில் சில மாதங்கள் இறால் பண்ணையிலும், மருந்து விற்பனை பிரதிநிதியாகவும் பணி செய்தேன்.

ஆனாலும் உயர்ந்த பதவிக்குச் செல்ல வேண்டும் எனும் வெறி என் மனதில் கொளுந்துவிட்டு எரிந்துகொண்டே இருந்தது. ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் எனும் ஒரு அலைவரிசையை படிக்கும் காலத்திலேயே மனதில் இருத்திக்கொள்ள வேண்டும்.

          

அதற்கேற்ப கடின உழைப்பு மேற்கொள்ள வேண்டும். ஒரு இலக்கை நிர்ணயித்து, அதற்கான தயாரிப்பை மேற்கொள்ள வேண்டும். எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும் எனும் விழிப்புணர்வு வேண்டும். மனப்பாடம் செய்யாதீர்கள். புரிந்து, பகுப்பாய்ந்து படியுங்கள்.

நேர்முகத் தேர்வில் தேர்வர்களின் கவனத்தை ஈர்க்கும்விதமாக நமது செயல்பாடு, பேசும் திறன், நடவடிக்கைகள் இருக்க வேண்டும். திறமைகளை வளர்த்துக்கொண்டு அர்ப்பணிப்புடன் தயாரானால் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறுவது நிச்சயம்.

தவறு செய்யும்போது சுட்டிக்காட்டும் நல்ல நண்பர்களுடன் நட்பு வைத்துக்கொள்ளுங்கள். நான் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தபோது தேர்வுக்கு நெருங்கிய ஒரு நாள் இரவில் படித்துக்கொண்டிருந்தபோது மிகவும் அயர்ச்சியாகி தரையில் படுத்து தூங்கத்தொடங்கினேன்.

அப்போது, அருகிலிருந்த எனது நண்பர் என்னை தூக்கத்தில் இருந்து எழுப்பி, இது தூங்கும் தருணம் அல்ல, படி என்றார். எனக்கு சோர்வாக உள்ளது. முடியவில்லை என்றேன். ‘இறந்தாலும் பரவாயில்லை. படித்துக்கொண்டிருந்தபோது இறந்தான் என்று வரலாற்றில் உனது பெயர் இடம்பெறும்.

எழுந்து படி’ என உற்சாகப்படுத்தினார். உடனே, எழுந்து என்னை சரிசெய்துகொண்டு படிக்கத் தொடங்கினேன். என்னை அன்று உற்சாகப்படுத்திய நண்பர் அண்ணாதுரை பிற்காலத்தில் ஐஏஎஸ் அதிகாரியானார்.

சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வுக்கு பிடிக்காத பாடத்தை தேர்வு செய்யாதீர்கள். பிடித்த பாடத்தை தேர்வு செய்துகொண்டு தயாரிப்பு செய்யுங்கள். செல்போனை தேவைக்கு மட்டுமே பயன்படுத்துங்கள். தொடர்ச்சியாக படித்தால் ஒருவித அயர்ச்சி ஏற்படும்.

எனவே, ஒவ்வொரு 30 நிமிடத்துக்கும் 5 நிமிடம் இடைவெளி விடுங்கள். அந்த நேரத்தில் பாட்டு கேட்பது, நகைச்சுவை கேட்பது என பிடித்தமான செயல்களில் ஈடுபடுங்கள். முடியாது எனும் எண்ணத்தை மனதிலிருந்து அறவே அகற்றிவிட வேண்டும்.

இப்போது நான் படிக்கும் மனநிலையில் இல்லை எனக் கூறி பலர் ஆத்மார்த்தமாக படிப்பில் கவனம் செலுத்துவதில்லை. அப்படி நினைப்பதே தவறானது. ஓடும் நதி, வீசும் காற்றுதான் அழகு.

நிகழ்ச்சியில் பங்கேற்றோரில் ஒரு பகுதியினர்.

அதேபோல, இயங்கிக்கொண்டே இருப்பதுதான் உயிரினங்களுக்கு, மனிதருக்கு அழகு. ஐஏஎஸ் பதவி போன்ற உயர்ந்த இலக்குகளை குறிவைத்தால், இடையிலேயே பல்வேறு வாய்ப்புகள் தானாக கிடைக்கும்.

நான் குடிமைப் பணி தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தபோது 5 அரசு வேலை வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், அந்த பதவிகளுடன் எனது வாழ்க்கையை நான் நிறைவு செய்து கொள்ளவில்லை.

தொடர்ந்து, குடிமைப் பணி பதவி எனும் இலக்கை நோக்கி பயணித்து இலக்கை அடைந்தேன். அரசுகளும் குடிமைப் பணி தேர்வுக்கான பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றன. அவற்றை பயன்படுத்தி குடிமைப் பணி அதிகாரி ஆகுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சத்யச்ர் பூமிநாதன் பேசியது: விதைகள் எப்படி இருந்தாலும், அவற்றை வீரியம் மிக்க விதைகளாக மாற்றுவதுதான் உனக்குள் ஓர் ஐஏஎஸ் நிகழ்ச்சியின் நோக்கம்.

படிப்பதற்கு வசதி, வாய்ப்பு, இடம் உட்பட எதுவும் முக்கியமல்ல என்பதற்கு ரயில் நிலைய மின்விளக்கு வெளிச்சத்தில் படித்து குடிமைப் பணி அதிகாரியான ஜெயசீலன் முன்னுதாரணமாக திகழ்கிறார். கடந்த 10, 15 ஆண்டுகளின் யுபிஎஸ்சி வினாத்தாள்களை சேகரித்து தேர்வுக்கு தயாராக வேண்டும்.

ஐஏஎஸ்-க்கு தேர்வானவர்கள் எல்லாம் தங்களுக்கு உள்ள அறிவைக் கொண்டு யுபிஎஸ்சி தேர்வை எதிர்கொண்டவிதம்தான், அவர்களை ஐஏஎஸ் அதிகாரி ஆக்கியது. எனவே, நமக்கு அதீத அறிவு கிடையாது என தயங்கி, ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகாமல் இருந்துவிடாதீர்கள்.

இப்போதைய இளைய தலைமுறைக்கு கிடைத்துள்ள சுதந்திரத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். தினமும் ஒரு செய்தித்தாள் படியுங்கள். மத்திய அரசு நிறுவனத்தின் சன்சத் தொலைக்காட்சி பாருங்கள்.

ஐஏஎஸ்தேர்வுக்காக ஓராண்டில் 2,000 முதல் 2,300 மணிநேரம் ஈடுபாட்டுடன் தயாரிப்பு செய்தால் அந்த பதவியை நிச்சயம் அடையலாம். உங்களுக்குள் இருக்கும் உனக்குள் ஓர் ஐஏஎஸ் ஆர்வத்தை தூண்டுங்கள். உயர்ந்த லட்சியத்துடன் செல்லுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் பேசும்போது, “‘இந்து தமிழ் திசை' நாளிதழ் செய்திகள் வழங்குவதைத் தாண்டி, பல்வேறு துறைகளில் நாட்டுக்கு நல்ல உயரதிகாரிகளை உருவாக்க வேண்டும் எனும் உன்னத நோக்கத்தில் உனக்குள் ஓர் ஐஏஎஸ் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துகிறது.

வெற்றி, தோல்வி பற்றி கவலைப்படாமல் தேர்வுக்கு தயாராக வேண்டும். புத்தக வாசிப்பு மிகவும் அவசியம்” என்றார். கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி பேராசிரியர் ஆதில் பைக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT