சென்னை: தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர்ப் பட்டியலை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தேர்வுத்துறை இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: “நடப்பு கல்வி ஆண்டில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, எமிஸ் தளத்தில் மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, பாலினம், புகைப்படம், செல்போன் எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து திருத்தம் செய்ய கடந்த நவ.25-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.
தேர்வுக் கட்டணம் செலுத்தவும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர்கள் www.dgeapp.tnschools.gov.in என்ற இணையதளத்தில் டிச.5-ம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதில் அனைத்து மாணவர்களின் பெயர்களும் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். பெயர், பிறந்த தேதி, புகைப்படம் உள்ளிட்ட விவரங்களில் திருத்தம் இருந்தால் இணையதளத்திலேயே மேற்கொள்ளலாம். பாலினம், பயிற்று மொழி, பாடத் தொகுப்பு உள்ளிட்ட விவரங்களில் திருத்தம் தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்தை அணுக வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.