சென்னை: மாணவிகளை தொழில்முனைவோர் உருவாக்கும் வகையில், எத்திராஜ் மகளிர் கல்லூரியில் ஸ்டார்ட்-அப் மறறும் இன்குபேஷன் மையம் தொடங்கப்பட்டுள்ளது.
புதிய சிந்தனைகளை கொண்ட இளம்தலைமுறை மாணவிகளை தொழில்முனைவோராக உருவாக்கும் நோக்கில் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் ஸ்டார்ட்-அப் மற்றும் இன்குபேஷன் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொழில் தொடங்க ஆர்வமுடைய மாணவிகளுக்கு புதிய சிந்தனைகளை உருவாக்குவது, அவர்களின் புதிய தொழில்முயற்சிகளுக்கு வழிகாட்டுவது போன்றவை இந்த மையத்தின் தலையாய பணிகள் ஆகும்.
அதோடு மாணவிகளின் வணிக மாதிரிகளை ஆராயவும் தொழில் நிறுவனங்களுடன் பேசி வணிக வாய்ப்புகளை உருவாக்குவது முதலிய பணிகளையும் இந்த மையம் மேற்கொள்ளும். கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் ஸ்டார்ட்-அப் மற்றும் இன்குபேஷன் மையத்தை தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்ட இயக்குநர் ஆஷா அஜித் தொடங்கி வைத்தார்.
நிகழ்வில், தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் அமைப்பின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் சிவராஜா ராமநாதன், நேச்சுரல்ஸ் சலூன் இணை நிறுவனர்கள் சி.கே.குமரவேல், வீணா குமரவேல், எத்திராஜ் கல்லூரியின் நிர்வாகக்குழு தலைவர் வி.எம்.முரளிதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக, கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் செ.உமா கவுரி வரவேற்றுப் பேசினார்.