பட்டதாரி ஆசிரியர்களுக்கான சிறப்பு 'டெட்' 2-வது தாள் தேர்வு நேற்று நடைபெற்றது. திருவள்ளூர் ஆர்.எம்.ஜெயின் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு நடைபெறுவதை ஆய்வு செய்த மாநில தொடக்கக் கல்வி இயக்குநர் பி.ஏ.நரேஷ்.
சென்னை: தமிழகம் முழுவதும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் 2-வது தாள் தேர்வு நேற்று நடைபெற்றது. 1.61 லட்சம் பேர் பங்கேற்றனர் இந்த தேர்வுகடினமாக இருந்ததாக பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 1 முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்கள் முதல் தாளிலும், பட்டதாரி ஆசிரியர்கள் 2-வது தாளிலும் தேர்ச்சி பெற வேண்டும்.
புதிதாக ஆசிரியர் பணியில் சேருபவர்கள் மட்டுமின்றி, ஏற்கெனவே பணியில் உள்ளவர்களுக்கும் டெட் தேர்ச்சி கட்டாயம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2028-க்குள் தேர்ச்சி பெற வேண்டும் என காலக் கெடுவும் நிர்ணயித்துள்ளது. பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம்.
உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு டெட் தேர்வு நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் முதல் தாள் தேர்வு நேற்று முன்தினம் (ஜூலை 4) நடத்தப்பட்டது. இத்தேர்வை 59 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தேர்வு கடினமாக இருந்ததாக பெரும்பாலான ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், பணியில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் 2-வது தாள் தேர்வு நேற்று நடைபெற்றது. சென்னையில் 38 மையங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 603 மையங்களில் தேர்வு நடந்தது.
95.95 சதவீதம் பேர் வருகை: ‘2-வது தாள் தேர்வை எழுத 1.68 லட்சம் பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில், 1.61 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். வருகைப்பதிவு 95.95 சதவீதம். அனைத்து மையங்களிலும் தேர்வு சுமுகமாக, வெளிப்படைத் தன்மையுடன் நடந்தது’ என்று ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, சிறப்பு டெட் 2-வது தாள் தேர்வில் தமிழ், ஆங்கிலம், கல்வி உளவியல் ஆகிய பகுதிகளில் வினாக்கள் மிகவும் கடினமாக இருந்ததாக தேர்வு எழுதிய ஆசிரியர்கள் கூறினர். டெட் தேர்வில் தேர்ச்சி பெற பொதுப் பிரிவினர் 150-க்கு 90 மதிப்பெண்ணும், பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி, டிஎன்சி, மாற்றுத் திறனாளிகள் 75 மதிப்பெண்ணும், எஸ்சி, எஸ்டி, எஸ்சி-அருந்ததியர் 60 மதிப்பெண்ணும் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.