கோப்புப் படம்
சென்னை: அரசுப் பள்ளிகளில் ஆங்கிலப் பாடம் கற்பிக்கும் 1,991 பட்டதாரி ஆசிரியர்களுக்கான 5 நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஜன. 19-ம் தேதிமுதல் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிநிறுவனம் (எஸ்சிஇஆர்டி) சார்பில் அனைத்து மாவட்டக் கல்விநிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: பட்டதாரி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மண்டல அளவில் கோவை, மதுரை, வேலூர், திண்டுக்கல், சேலம், தஞ்சை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜன. 19 முதல் 23-ம் தேதி வரை உண்டு உறைவிட பயிற்சியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஆங்கிலப் பாடம் கற்பிக்கும் 1,991 ஆசிரியர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்த பயிற்சியில் பங்கேற்கவுள்ள ஆசிரியர்கள், பயிற்சி வழங்கும் கருத்தாளர்கள் பட்டியல் சம்பந்தப்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் முதல்வர்கள் மற்றும் மாவட்டக் கல்விஅலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த ஆசிரியர்கள் உரிய அட்டவணையின்படி பயிற்சி மேற்கொள்ளதேவையான முன்னேற்பாடு களை மேற்கொள்ள வேண்டும்.
இதுதவிர பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரியர்களை 6 முதல் 10-ம் வகுப்புகளுக்கான ஆங்கிலப் பாடப் புத்தகங்களை உடன் கொண்டுவர அறிவுறுத்த வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு உரிய நாள்களில் பணிவிடுப்பு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.