புதுடெல்லி: ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் கடந்த 5ம் தேதி ‘உலக அரசுகளின் உச்சி மாநாடு - 2026’ நடைபெற்றது. இதில் இந்தியாவின் காஷ்மீரைச் சேர்ந்த ரூபிள் நாகி என்ற பெண், உலகின் சிறந்த ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஒரு மில்லியன் டாலர் (சுமார் ரூ.9 கோடி) பரிசு வழங்கப்பட்டது.
ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்புடன் இணைந்து லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘வர்கி அறக்கட்டளை’ ஆண்டுதோறும் சிறந்து ஆசிரியரைத் தேர்வு செய்து விருது வழங்கி கவுரவிக்கிறது. அதன்படி இந்த ஆண்டு விருது ரூபிள் நாகிக்கு வழங்கப்பட்டுள்ளது. ரூபிள் நாகி காஷ்மீரைச் சேர்ந்தவர். சமூக சேவகர், ஓவியக் கலைஞர், ஆசிரியர் என பன்முகத் தன்மை கொண்டவர்.
‘ரூபிள் நாகி கலை அறக்கட்டளை’ ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்தியாவில் உள்ள குடிசைப் பகுதிகளில் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதை ஒரு இயக்கமாகவே நடத்தி வருகிறார். இந்தியாவில் இதுவரை 800-க்கும் மேற்பட்ட கல்வி மையங்களை குடிசைப் பகுதிகளிலேயே உருவாக்கி கல்வி கற்பிக்கிறார். அத்துடன் சுவர் ஓவியங்கள் மூலம் கல்வியை புதுமையான முறையில் கற்பிக்கிறார்.
இது குறித்து ரூபிள் நாகி கூறும்போது, ”எனக்கு கிடைத்த இந்த விருது, இந்தியர்கள் அனைவருக்கும் கிடைத்தாக நினைக்கிறேன். காஷ்மீரில் ஒரு பள்ளி தொடங்க வேண்டும் என்பது என்பது எனது நீண்ட நாள் கனவு. இப்போது கிடைத்துள்ள பரிசுப் பணத்தில் அங்கு பள்ளி கட்டுவேன். அத்துடன், இலவசமாக தொழிற்கல்வி மற்றும் டிஜிட்டல் கல்வி பயிற்சி அளிப்பதற்கான பயிற்சி நிறுவனத்தை தொடங்குவேன். இங்கு ஏழை குழந்தைகள், இளைஞர்களுக்கு இலவசமாகவே அனைத்து பயிற்சிகளும் வழங்கப்படும்” என்றார்.
ரூபிள் நாகி சிறந்த ஓவியர். இவர் 850-க்கும் மேற்பட்ட ஓவியங்கள், சிற்பங்களை உருவாக்கி உள்ளார். அவை உலகளவில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. குடியரசுத் தலைவர் மாளிகையில் ஓவியக் கண்காட்சி நடத்த அழைக்கப்பட்ட முதல் கலைஞர் ரூபிள் நாகிதான். இவர் உலகளவில் பல்வேறு விருதுகளை ஏற்கெனவே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.