சென்னை: இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்டிஇ) தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். தமிழகம் முழுவதுள்ள 7,688 தனியார் பள்ளிகளில் சுமார் 1 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணமின்றி இலவசமாகப் படிக்கலாம்.
தமிழகத்தில் 2013-ல் அமல்படுத்தப்பட்ட இந்த ஆர்டிஇ திட்டத்தின்கீழ் இதுவரை சுமார் 5.7 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர். வரும் கல்வியாண்டு (2026-27) இலவச மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு ஏப்.20-ம் தேதி தொடங்கியது. கடந்த 10 நாட்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
மே 18-ம் தேதி வரை கால அவகாசம் உள்ளதால், விருப்பமுள்ளவர்கள் https://rteadmission.tnschools.gov.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். ஒரு பெற்றோர் அதிகபட்சம் தங்கள் இருப்பிடத்துக்கு அருகே உள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம். பள்ளியில் நிர்ணயித்த இடங்களைவிட அதிக விண்ணப்பங்கள் வந்தால் குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.