சென்னை: ராம்ராஜ் காட்டன் வழங்கிய ‘இந்து தமிழ் திசை - அன்பாசிரியர் விருது’ விழாவில் தமிழகம், புதுச்சேரியில் இருந்து தேர்வான 53 ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பான கல்வியை அளிப்பதுடன், அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு, பள்ளிக்குப் பெருமை சேர்க்கும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ராம்ராஜ் காட்டன் நிறுவனத்துடன் சேர்ந்து ‘அன்பாசிரியர் விருதை’ கடந்த 2020-ம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது.
தொடர்ந்து 6-வது முறையாக இந்த ஆண்டுக்கான ‘அன்பாசிரியர் விருது’ பெற தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 450-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் 180 பேர் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டனர். மூத்த கல்வியாளர்கள், பேராசிரியர்கள் அடங்கிய தேர்வுக் குழுவினரால் இணையவழியில் நேர்காணல் நடத்தப்பட்டு, 50 பேர் அன்பாசிரியர் விருதுக்கும், 2 பேர் சிறப்பு அன்பாசிரியர் விருதுக்கும், ஒருவர் முன்மாதிரி அன்பாசிரியர் விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.
விருது வழங்கும் விழா சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மகாலில் நேற்று நடைபெற்றது. ‘இந்து தமிழ் திசை’ இணையதள ஆசிரியர் பாரதி தமிழன் வரவேற்றுப் பேசும்போது, ‘‘ஆசிரியர்களால்தான் நம் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது என்று சொல்லாத மனிதர்களே இருக்க முடியாது. மற்றவர்களை உயர்த்தக்கூடிய படிக்கட்டுகளாகவே நிற்பவர்கள் ஆசிரியர்கள். தொடர்ந்து 6-வது முறையாக அவர்களுக்கு விருது அளித்துப் பாராட்டுவதில் எங்கள் நிறுவனம் பெருமை கொள்கிறது’’ என்றார்.
இந்த நிகழ்வில் ‘இந்து தமிழ் திசை’ இயக்குநர் ரோஹித் ரங்கராஜன், உதவி துணைத் தலைவர் (சர்க்குலேஷன்) வெங்கடசுப்பிரமணியன், விளம்பரப்பிரிவு பொது மேலாளர் வி.சிவக்குமார், எல்ஐசி (முதன்மை ஆயுள் காப்பீட்டு ஆலோசகர் பிரிவு) மண்டல மேலாளர் ஜி.குமார், சாந்தாஸ் சில்க்ஸ் நிர்வாக இயக்குநர் கேவிகேஆர் தனசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி பங்குதாரர்கள், நடுவர் குழுவினர் கவுரவிக்கப்பட்டனர். விழாவை ‘இந்து தமிழ் திசை' உதவி செய்தி ஆசிரியர் ம.சுசித்ரா, உதவி பொது மேலாளர் (நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு & விளம்பரம்) மு.முருகேசன் தொகுத்து வழங்கினர்.
விழாவை ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி இணைந்து நடத்தியது. பங்குதாரர்களாக பொன்வண்டு டிடர்ஜென்ட் நிறுவனம், சாந்தாஸ் சில்க்ஸ் மதுரை, பிஎஸ்ஆர் சில்க் சாரீஸ், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) இணைந்திருந்தன. பிரத்யேக வானொலி பங்குதாரராக மிர்ச்சி 98.3 இருந்தது.
சிறந்த சமுதாயத்தை உருவாக்குவோம்: அமைச்சர் ராஜ்மோகன்
நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்கும் பணியை ஒருங்கிணைக்க டெல்லி சென்றுள்ள பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், அங்கிருந்து வழங்கிய வாழ்த்துரை:
தமிழகம், புதுச்சேரியில் பொறுப்புமிக்க, சமூகத்தில் அக்கறையுள்ள மாணவர்களை உருவாக்கக்கூடிய மாபெரும் பணியில் தங்கள் வாழ்க்கையை ஆசிரியர்கள் அர்ப்பணித்துள்ளனர். அவர்களது சேவை போற்றுதலுக்குரியது. தவிர்க்க முடியாத சூழலால் இந்த விழாவில் பங்கேற்க இயலவில்லை. எனினும், என் நெஞ்சமெல்லாம் அங்குதான் இருக்கிறது. அனைவரும் ஒன்றாக சேர்ந்து மேன்மேலும் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்குவோம்.
எதிர்காலத்துக்கான கல்வி அவசியம்: பள்ளிக்கல்வித் துறைச் செயலர் பி.சந்தரமோகன்
விருது பெற்ற 53 ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள். ஆசிரியர் என்பவர் ஒரு குழந்தையின் வாழ்க்கைக்குள் நுழைந்து, அவர்களது எதிர்காலத்தை வடிவமைக்கும் மாபெரும் சக்தி. ஆனால், குழந்தைகளை வழிநடத்த சக்தி மட்டும் போதாது; அன்பும் வேண்டும். அந்த அன்புடன் செயல்படும் ஆசிரியர்தான் அன்பாசிரியராக மாறுகிறார்.
உன்னால் முடியும் என்று ஒரு மாணவனின் மனதில் ஆசிரியர் விதைக்கும் தன்னம்பிக்கைதான் அந்த குழந்தையின் வெற்றிக்கான முதல் படியாக மாறுகிறது.
அன்பாசிரியர்களின் பணியை கவுரவிக்கும் இந்த முயற்சியை கடந்த 6 ஆண்டுகளாக தொடர்ந்து செய்துவரும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். கடந்த 6 ஆண்டுகளில் 225 ஆசிரியர்கள் இந்த விருதைப் பெற்றுள்ளனர். அதன்பிறகு, அவர்களில் பலர் மத்திய, மாநில அரசுகளின் நல்லாசிரியர் விருதுகளையும் பெற்றுள்ளனர். ‘அன்பாசிரியர்’ விருதின் தரத்துக்கு இதைவிட சிறந்த சான்று தேவை இல்லை.
உலகம் வேகமாக மாறி வருகிறது. ஒரு தலைமுறையில் நாம் பார்த்த மாற்றங்களை, இன்று உலகம் சில ஆண்டுகளிலேயே சந்தித்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நம் வாழ்க்கைக்குள் வேகமாக நுழைந்து கொண்டிருக்கிறது. எனவே, நேற்றைய கல்வியை மட்டும் வைத்துக் கொண்டு நாளைய உலகத்துக்கு குழந்தைகளைத் தயார்படுத்த முடியாது.
எதிர்காலத்துக்கான கல்வி அதிக அறிவை மட்டும் கேட்காது. புதிதாக சிந்திக்கும் திறன், கேள்வி கேட்கும் துணிவு, பகுத்தறிவுடன் சிந்திக்கும் ஆற்றல், தொழில்நுட்ப பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு திறன்களை கேட்கும். அதனால்தான் தமிழக அரசு பாடத் திட்டத்தில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வருகிறது. அதற்கு பெயர்தான் ‘டிஎன்-அறிவு’ பாடத்திட்டம். இது பகுத்துச் சிந்திக்கும் திறன், புதிதாகப் படைக்கும் திறன்.
வாய்ப்புகளை உருவாக்கும் திறன், நாளைய தொழில்நுட்பங்களுடன் தொடர்ந்து வளரக்கூடிய திறன் ஆகியவற்றை மேம்படுத்தும். இது பதிலை நினைவில் வைத்திருப்பதைவிட, கேள்வியை உருவாக்க கற்றுக்கொடுக்கும். அதேபோல, புதியதைப் படைக்கும் துணிவு, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, தொழில்நுட்பத்துடன் இணைந்து முன்னேறுவதையும் கற்றுத் தரும். இந்த பாடத்திட்டம் நடப்பு கல்வி ஆண்டில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு 4 முதல் 8-ம் வகுப்பு வரையும், அதற்கு அடுத்த ஆண்டு 9 முதல் 12-ம் வகுப்பு வரையும் விரிவாக்கப்படும்.
அடுத்த தலைமுறையின் சிந்தனையை வடிவமைக்கும் மாற்றத்தை நிகழ்த்துபவர்கள் ஆசிரியர்கள். இன்று நீங்கள் பெற்ற விருது, கடந்தகாலப் பணிக்கான அங்கீகாரம் மட்டுமல்ல; அடுத்த தலைமுறைக்காக உங்கள் மீது வைக்கப்படும் நம்பிக்கை.
வாழ்க்கையை கற்றுத் தரும் ஆசிரியர்: அமைச்சர் சரத்குமார்
நேபாளத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட 21 தமிழர்கள் நேற்று (ஆக.28) இரவு சென்னை வந்தடைந்தனர். அவர்களை வரவேற்க சென்ற ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் என்.ஆனந்த், நள்ளிரவு ஒரு மணி அளவில் என்னை தொடர்பு கொண்டு, “அன்பாசிரியர் விருது நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்க இயலாததால் கட்டாயம் நீங்கள் சென்று கலந்து கொண்டு விருது வழங்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார். நள்ளிரவு ஒரு மணிக்கு தொடர்பு கொண்டு கூறுகிறார் என்பதில் இருந்தே இதன் முக்கியத்துவம் அனைவருக்கும் புரியும்.
பெற்றோர், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்றனர். அந்த குழந்தைகளுக்கான அறிவையும், திறனையும், அதன்மூலமாக வாழ்க்கையையும் கொடுப்பது ஆசிரியர்களே. சமூகத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை நமக்கு கற்றுக் கொடுத்தவர்கள் ஆசிரியர்கள். அவர்களது முயற்சிகளால்தான் பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள் உருவாகியுள்ளனர். நான் ஒரு அமைச்சராக உருவானதற்கும் காரணம் ஆசிரியர்கள்தான்.
நாம் என்னவாகிக் காட்டுகிறோம் என்பதில்தான் ஆசிரியர்களின் பெருமை இருக்கிறது. அந்த வகையில் எங்கள் முதல்வரும் எங்களுக்கு ஆசிரியர்தான். அவர் கூறிய வகையில் உழைத்து வெற்றி பெற்றுள்ளோம். ஒரு ஆசிரியர் நன்றாக இருந்தால், கல்வியும் அதன் மூலமாக தமிழகமும், ஒட்டுமொத்த நாடும் நன்றாக இருக்கும்.
நேர்காணலில் நெகிழ்ச்சி
நடுவர் குழுவில் இடம்பெற்ற தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் முன்னாள் மொழிப்புலத் தலைவர் பாரதி பாலன்: அன்பாசிரியர் விருதுக்கான ஆசிரியர்களை தேர்வு செய்வது மிகவும் சவாலாக இருந்தது. அதேநேரம், இதற்காக ஆசிரியர்களிடம் நேர்காணல் செய்தபோது ஒருவித நெகிழ்ச்சியும் ஏற்பட்டது. ஆசிரியர்களின் அறிவு, கற்பித்தல் திறனை மதிப்பீடு செய்யலாம். ஆனால், அவர்களது அன்பை எப்படி மதிப்பீடு செய்வது? இந்த காட்சிகளை எல்லாம் நேர்காணலில் பார்த்தோம். அது மறக்க முடியாத அனுபவம்.
விருதால் உற்சாகம்
ஆவிச்சி கலை, அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் பிரபாவதி: கரும்பலகை மூலம் பல கைகளை உயர்த்திய ஆசிரியர்கள் அனைவருமே பாராட்டுக்கு உரியவர்கள்தான். இதில் யார் அன்பாசிரியர்கள்? புத்தகத்தை தாண்டி புது உலகைக் காட்டும் புரட்சியாளர்கள்தான் அன்பாசிரியர்கள். மாணவர்களின் மூளையோடு மட்டும் உரையாடாமல், அவர்களது இதயத்தோடு கலந்துரையாடுபவர்கள். மாணவர்களிடம் மறைந்திருக்கும் திறமைகளைக் கண்டறிந்து அவற்றை திறக்கும் சாவிகளே அன்பாசிரியர்கள். ஆசிரியர்களுக்கு வாழ்நாள் முழுவதும் உந்துதலையும், உற்சாகத்தையும் இந்த அன்பாசிரியர் விருது வழங்கும் என்று நம்புகிறேன்.
அறிவு, அக்கறை, அன்புக்கான விருது: ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன்
வாழ்க்கையில் நான் முன்னேறக் காரணமாக இருந்தவர்கள் ஆசிரியர்கள். அவர்களது அன்புதான் என்னை உயர்த்தியது. இங்கு விருது பெறும் ஆசிரியர்கள் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள வரவில்லை. அடுத்த தலைமுறையை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற அறிவு, அக்கறை மட்டுமின்றி, இதயத்தில் இருந்து அன்பையும் வழங்கிப் பணியாற்றியதாலேயே உயரிய விருதை பெறுகின்றனர். வகுப்பறையில் மாணவர்களை சமமாகப் புரிந்துகொண்டு தன்னம்பிக்கையை விதைப்பவரே அன்பாசிரியர்.
ஆசிரியர்.. வாழ்வின் திசைகாட்டி: ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி முதல்வர் (கல்விப் பிரிவு) கே.மாலதி
புத்தகத்தில் இருக்கும் கருத்துகளை மட்டுமே கற்றுத் தருபவர் அல்ல ஆசிரியர்.அவர் ஒரு மாணவனின் வாழ்க்கைக்கான திசைகாட்டி. மாணவர்களின் திறமையை அடையாளம் கண்டு, அவர்களது கனவுகளுக்கு வடிவம் தருபவர். அதனால்தான் எல்லோரிடமும், எப்போதும் மரியாதைக்கு உரியவர்களாக திகழ்கின்றனர் ஆசிரியர்கள். கல்விப் பணியில் மட்டுமின்றி, சமூக அக்கறையுடன், மனிதநேயமும் கொண்ட ஆசிரியர்களைத் தேடி, அடையாளம் கண்டு, அவர்களை கவுரவிக்கும் இந்த சிறப்பு முயற்சிக்காக ராம்ராஜ் காட்டன் நிறுவனம், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு எனது பாராட்டுகள்.