தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் கோட்டூர்புரம் பிர்லா கோளரங்கத்தில் நடைபெற்ற ‘சூழல் 2.0’ விநாடி வினா இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ பரிசு வழங்கினார்.

 
கல்வி

சுற்றுச்சூழல் போட்டியில் வென்ற பள்ளிகளுக்கு பரிசு: துறை செயலர் சுப்ரியா சாஹூ வழங்கினார்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை சார்பில், நடைபெற்ற சுற்றுச்சூழல் தொடர்பான விநாடி-வினா போட்டியில் வென்ற பள்ளிகளுக்கு, சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹூ பரிசுகளை வழங்கினார்.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையின் கீழ் இயங்கும், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் சார்பில், காலநிலைக் கல்வியறிவு முன்னெடுப்பின் கீழ், மாணவர்களுக்கு கோடைக்கால மற்றும் குளிர்கால இயற்கை முகாம்கள், காலநிலை மாற்றம் குறித்து பள்ளி ஆசிரியர்களுக்கான உறைவிடப் பயிற்சி முகாம்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு ‘சூழல் அறிவோம்’ எனும் தலைப்பிலான விநாடி-வினா ஆகியவை பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து நடத்தப்பட்டது.

அதன்படி, மாநிலம் தழுவிய “சூழல் 2.0” விநாடி-வினா போட்டி கடந்த அக்.23-ம் தேதி தொடங்கப்பட்டது. இணைய வழியில் நடத்தப்பட்ட இந்த விநாடி-வினாவின் முதற்கட்ட போட்டிகளில் அணிகளுக்கு இருவர் என சுமார் 17,000 அணிகள் என, 34,000 மாணவர்கள் பங்கேற்றனர். அனைத்து மாவட்டங்களிலும் முதற்கட்ட போட்டியில் வெற்றி பெற்ற 10 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, சென்னை, சேலம், மதுரை, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை திருச்சி ஆகிய மண்டலங்களில் மண்டல அளவிலான கடந்த நவ.18, 19 தேதிகளில் இணைய வழியில் போட்டிகள் நடத்தப்பட்டன.

அதைத் தொடர்ந்து, சென்னை பிர்லா கோளரங்கில் உள்ள அறிவியல் நகர அரங்கில் “சூழல் 2.0” விநாடி வினாவின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. அதில் நாமக்கல் மாவட்டம். அனியபுரம், லிட்டில் ஏஞ்சல்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி முதலிடத்தையும், கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளமூடி, ஸ்டெல்லா மேரீஸ் சிபிஎஸ்இ பள்ளி 2-ம் இடத்தையும், சென்னை, கலைமகள் வித்யாஷ்ரம் பள்ளி 3-ம் இடத்தையும் பிடித்தன.

பரிசளிப்பு விழாவில், சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹூ பங்கேற்று, முதல் 3 இடங்களை பிடித்த அணிகளுக்கு முறையே ரூ.50 ஆயிரம், ரூ.30 ஆயிரம், ரூ.20 ஆயிரம் மற்றும் ஆறுதல் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் சிறப்புச் செயலர் அனுராக்மிஸ்ரா, சுற்றுச்சூழல் துறை இயக்குநர் ராகுல் நாத், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் உதவிதிட்ட இயக்குநர் கிரிஷ் பால்வே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT