கோப்புப் படம்
சென்னை: தமிழ்நாடு ஆராய்ச்சி மாணவர்கள் சங்க பொதுச்செயலாளர் சண்முகராஜன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நம்நாட்டிலேயே தமிழகத்தில்தான் ஆராய்ச்சி படிப்புகளை ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
பிஎச்டி மாணவர்களில் பலர் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். மாநிலத்தில் உயர் கல்வியின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
தற்போது கல்லூரிகளில் படிக்கும் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பிஎச்டி மாணவர் சேர்க்கப்படவில்லை. மற்ற மாணவர்களைவிட மடிக்கணினி அதிகமாக தேவைப்படுவது பிஎச்டி மாணவர்களுக்குத்தான்.
தரவு சேமிப்பு, பகுப்பாய்வு, ஆய்வறிக்கை எழுதுதல் உட்பட பல்வேறு பணிகளுக்கு மடிக்கணினி அவசியம். ஆனால், அவர்களுக்கு தனிப்பட்ட கணினி வசதி இல்லாதது தரமான ஆராய்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது.
எனவே பிஎச்டி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி திட்டத்தை விரிவுபடுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். இத்திட்டம் அமலானால் தமிழகத்தில் ஆராய்ச்சி உற்பத்தி திறன், தரம் உயரும். மேலும், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியாகும் ஆய்வுக் கட்டுரைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.