சென்னை: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடுமுழுவதும் வரும் மே மாதம் 3-ம் தேதி நடைபெறுகிறது. அதற்காக பாடத்திட்டங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் நீட் தேர்வில் தகுதி பெறும் மாணவர்களைக் கொண்டு நிரப்பப்படுகிறது.
அதேபோல், ராணுவ கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி 2026-27-ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் வரும் மே மாதம் 3-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2026-27-ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு நாடுமுழுவதும் வரும் மே மாதம் 3-ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பது பிப்.8-ம் தேதி (நேற்று)https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் தொடங்கியுள்ளது. மார்ச் 8-ம் தேதி நள்ளிரவு 11.50 மணி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் மார்ச் 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தங்கள் இருந்தால் மேற்கொள்ளலாம்.
தேர்வு நகரம், தேர்வு மையம் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களை இணையதளத்தை பார்த்து அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த நீட் தேர்வானது தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட மொத்தம் 13 மொழிகளில் நடத்தப்படவுள்ளது. தேர்தவில் 180 கேள்விகள் இடம்பெறும். ஒவ்வொரு கேள்விக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும். தாவரவியல் மற்றும் விலங்கியலை உள்ளடக்கிய உயிரியல் பாடத்தில் இருந்து 360 மதிப்பெண்களுக்கும் இயற்பியல் மற்றும் வேதியியலில் பாடங்களில் தலா 180 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் இடம்பெறும். தவறான பதில் அளித்தால் ஒரு மதிப்பெண் (நெகட்டிவ்) குறைக்கப்படும்.
நீட் தேர்வுக்கான பாடத்திட்டங்களை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) https://www.nmc.org.in/ என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில்தான் நீட் தேர்வுக்கான கேள்விகள் கேட்கப்படவுள்ளன.