சென்னை: தமிழகத்துக்கு சமக்ர சிக் ஷா திட்டத்தின் கீழ், வழங்கப்படும் நிதியை நிலுவையின்றி உரிய காலத்தில் விடுவிக்க வேண்டும் என்று, ‘தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு’ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அகில இந்திய தேசியக் கல்வி சம்மேளனம் (அகில பாரதிய ராஷ்டிரிய சைக் ஷிக் மகா சங்கம்) அமைப்பின் தேசிய செயற்குழுக் கூட்டம் கர்நாடக மாநிலம் தார்வார் நகரில் கடந்த 16, 17-ம் தேதிகளில் நடைபெற்றது.
இந்த அமைப்பில் இணைப்பு பெற்றுள்ள ‘தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு’ சார்பில், அதன் தலைவர் திரிலோகசந்திரன், மகளிர் அணிச் செயலாளர் சாருமதி தேவி ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில், பொதுச் செயலாளர் கந்தசாமி பேசியதாவது:
ஒவ்வொரு மாநிலத்திலும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளுக்கு முன்பு வரை பணியில் சேர்ந்த அனைவருக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். தமிழகத்துக்கு சமக்ர சிக்க்ஷா (ஒருங்கிணைந்த கல்வி) திட்டத்தின் கீழ், வழங்கப்படும் நிதியை நிலுவையின்றி உரிய காலத்தில் விடுவிக்க வேண்டும்.
பழைய ஓய்வூதியத் திட்டம்
மத்திய அரசு ஊழியர்களில் 95 சதவீதம் பேர் ஒருங்கிணைந்த ஒய்வூதியத் திட்டத்தை விரும்பவில்லை. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். கல்வித் தகுதிகளுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியாக தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயம் செய்து, ஒரு மாநிலத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் எந்த மாநிலத்திலும் வேலைவாய்ப்பு பெற தகுதி வாய்ந்தவர்களாக கருதப்பட வேண்டும். உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் என்பது 2 ஆண்டு ஊதிய உயர்வு கொண்டதாக இருக்க வேண்டும்.
8-வது ஊதியக் குழு பரிந்துரை
மத்திய, மாநில அரசுகள் இதை செயல்படுத்த வேண்டும். 8-வது ஊதியக் குழு பரிந்துரைகளை விரைந்து அமல்படுத்தி 2026 ஜன.1-ம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்க வேண்டும். அதில் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.50,000, அடிப்படை ஊதியத்தின் சதவீத அடிப்படையில் வீட்டு வாடகைப்படி வழங்கப்பட வேண்டும்.
குறைந்தபட்ச ஒய்வூதியமாக ரூ.25,000 நிர்ணயிக்கப்பட வேண்டும். எஸ்சி, எஸ்டி கல்வி உதவித் தொகை பெறுபவர்கள் தேசிய வருவாய்வழி, திறனறிவுத் தேர்வு (என்எம்எம்எஸ்) திட்டத்தில் உதவித் தொகை பெற மத்தியக் கல்வி அமைச்சகம் அனுமதிப்பது இல்லை. இதை சரி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.