திருச்சி பாரதிதாசன் பல்கலை.யில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.என்.மஞ்சுளாவுக்கு முனைவர் பட்டம் வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. உடன், நாக் கமிட்டி இயக்குநர் ஜி.கண்ணபிரான். | படம்: எம்.மூர்த்தி |
திருச்சி: உயர் கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் முறையில் விரைவில் மாற்றம் வர உள்ளதாக தேசிய தர மதிப்பீட்டு நிர்ணயக் குழும (நாக்) இயக்குநர் ஜி.கண்ணபிரான் தெரிவித்தார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலை.யின் 40-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. துணைவேந்தர் பொறுப்புக் குழு கன்வீனரும், உயர் கல்வித் துறை ஆணையருமான இ.சுந்தரவள்ளி வரவேற்றார்.
பல்கலை. வேந்தரும், ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை வகித்து, 690 முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு பட்டங்களையும், பல்கலை. அளவில் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற பெற்ற 90 பேருக்கு பதக்கம், பட்டங்களையும் வழங்கினார்.
விழாவில் ‘நாக்’ இயக்குநர் ஜி.கண்ணபிரான் பேசியதாவது: தேசிய கல்விக் கொள்கை நாட்டின் உயர்கல்வி அமைப்பில் அடிப்படை மாற்றத்தை உருவாக்க உறுதியளிக்கிறது. உயர் கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் முறையில் நல்ல மாற்றம் வர உள்ளது.
அரசுக்கு கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்து, அங்கீகாரக் குழு பரிந்துரைக்க உள்ளது. நாட்டில் 75 சதவீத கல்லூரிகளும், 55 சதவீத பல்கலைக்கழகங்களும் இதுவரை எவ்விதமான அங்கீகாரமும் பெற தங்களை உட்படுத்திக்கொள்ளவில்லை.
இந்நிலையில், உயர் கல்வி நிறுவனங்கள் அடிப்படை அங்கீகாரம் பெற வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்தப்பட ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் பங்கேற்கவில்லை: விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், செயலர் சங்கர் ஆகியோர் பங்கேற்கவில்லை. உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, ஆளுநரிடம் முனைவர் பட்டம் பெற்றார்.
விளையாட்டுத் துறையில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அன்பில் மகேஸ், ஆளுநரிடம் பட்டம் பெறாமல், விழா முடிந்த பின்னர் பல்கலைக்கழகத்துக்குச் சென்று முனைவர் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.