கல்வி

தமிழ் வழியில் மருத்துவக் கல்வி சாத்தியமே! - அடித்துச் சொல்கிறார் திருச்சி மருத்துவக் கல்லூரி முதல்வர்

பி.ஜோசப் ஜெரால்டு

திருச்சி: ஒருவர் எத்தனை மொழி வேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளலாம். ஆனால், சிந்திப்பதற்கும், அறிவை வளர்ப்பதற்கும், முடிவுகளை எடுப்பதற்கும் அடிப்படையாக அமைவது தாய்மொழி மட்டுமே. மருத்துவத் துறையிலும் தாய்மொழியின் பங்கு என்பது இன்றியமையாதது. இது, மாணவர்கள் எளிதாக கற்கவும், நோயாளிகளுடன் நல்லுறவு கொள்ளவும் உதவுகிறது. மருத்துவ படிப்புகளை தாய்மொழியில் கற்பிக்க வேண்டும் என பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், மருத்துவத்துறையில் தமிழை வளர்ப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் சார்பில் மருத்துவ தமிழ்ச் செம்மல் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, மருத்துவத் துறைசார்ந்த 4 புத்தகங்களை தமிழில் எழுதியும், 2 புத்தகங்களைதமிழில் மொழிபெயர்த்தும் வழங்கியதற்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ச.குமரவேலுக்கு சென்னையில் அண்மையில் நடைபெற்ற விழாவில் ‘மருத்துவ தமிழ்ச் செம்மல்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

          

முடநீக்கியல் துறையைச் சேர்ந்த இவர், ‘எலும்பை அறிந்தால்’, ‘வீழாப் பெருவாழ்வு’, ‘முதுகெலும்பு’, ‘காயவியல்’ ஆகிய 4 புத்தகங்களை தமிழிலும், கிரே-இன் உடற்கூறியல், பெய்லிமற்றும் லவ் அறுவை சிகிச்சையில் ஒரு சிறு பயிற்சி ஆகியபுத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்தும் எழுதியுள்ளார். இதில், ‘கிரே-இன் உடற்கூறியல்’ என்ற நூலை தமிழகமுதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் வெளியிட்டுள்ளார்.

மேலும், முழங்கால் சில்லு முறிவுக்கு நவீன வகை கருவியை கண்டுபிடித்ததற்காக அறிவுசார் உரிமம் பெற்றுள்ளார். மேலும், அகரமுதலி சொற்குவை திட்ட வல்லுநர் குழுவில் 500-க்கும் மேற்பட்ட புதிய மருத்துவ தமிழ் சொற்களை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியது:

திருச்சி மாவட்டம் பேட்டைவாய்த்தலை அருகே உள்ள தேவஸ்தானம் பொருவாய் எனது சொந்தஊர். எனக்கு தமிழ்மொழியின் மீது ஆர்வம் ஏற்பட, எனது தந்தை தமிழாசான் கோ.சண்முகசுந்தரம் தான் காரணம். திருச்சி வெஸ்ட்ரி பள்ளி தமிழாசிரியர் செல்வம், பாலக்குறிச்சி தமிழாசிரியர் முத்தியாலு ஆகியோர் எனது தமிழ் ஆர்வத்தை தூண்டி, நான் தமிழில் சீராக எழுதுவதற்கு காரணமாக இருந்தனர்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவம், சென்னை மருத்துவக் கல்லூரியில் எலும்பியல் முதுநிலை, சாஸ்த்ரா பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றேன். தூய தமிழில் மருத்துவ நூல்களை எழுதும்போது, வழக்கத்தில் உள்ள தொழில்நுட்பச் சொற்கள் மற்றும் குழுஉக்குறி போன்றவை தடையாக உள்ளன.

இதை 2017-ம் ஆண்டு ‘எலும்பை அறிந்தால்’ என்ற நூலை எழுதும்போது உணர்ந்தேன். அந்த நேரத்தில் குறிப்பிட்ட செய்திகளையாவது தமிழில் கூற வேண்டும் என்ற ஆவலால், எலும்புகள், உடற்பாகங்களை குறிக்கும் சொற்களை மாற்றாமல் அப்படியே அந்த நூலில் பயன்படுத்தினேன். ஆங்கில மருத்துவ நூல்களில் எலும்புகள், உள் உறுப்புகள் ஆகியவை கிரேக்க, லத்தீன்மொழிகளில் உள்ளன. அவற்றை அப்படியே பெயர்ச்சொல்லாக தமிழில் மொழியாக்கம் செய்யும் நிலைதான் உள்ளது. அவ்வாறு அழைப்பது தவறு இல்லை எனவும் கூறப்படுகிறது. அது முறையல்ல.

தற்கால மருத்துவ மாணவர்களிடம் எலும்புகள், உடற்பாகங்களை குறிக்கும் கிரேக்க, லத்தீன் சொற்களின் பொருள் என்னவென்று கேட்டால், அது அந்த குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் ஒரு எலும்பு மற்றும் தசை என்று கூறுகிறார்களே தவிர, அவற்றின் பெயர்க் காரணம் கூறதெரியவில்லை. இந்த கண்ணோட்டத்துடன்தான் இந்த மருத்துவ நூல்களை எழுத ஆரம்பித்தேன். ஆங்கில சொற்களை நல்ல தமிழ்ச் சொற்களாக மாற்றி, அதை அறிந்து அதே பொருள்பட எளிதில் பயன்படுத்தகூடிய உத்தியை கூறியிருக்கிறேன்.

தமிழக அரசின் மருத்துவ தமிழ்ச் செம்மல் விருது பெற்ற திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் குமரவேல்.

ஒரு மாணவர் தாய்மொழியில் கற்ற விஷயங்களை, உலகெங்கும் இருக்கும் மற்ற மொழிபேசுபவர்களிடம் பகிர்ந்துகொள்ள முடியுமா? என்றும், அன்றாடம் மாறி வரும் நவீன உலகில் அந்த மாணவர் எவ்வாறு தனது தொழில் அறிவை புதுப்பித்துகொள்வார்? என்றும் சிலர் கேட்கின்றனர்.

இந்த கேள்விகளுக்கான பதில், தாய்மொழியில் படித்தால், ஏற்படும் அசாத்திய புரிதலை நினைவில் கொள்ள வேண்டும் என்பதுதான். தாய்மொழி வழி மருத்துவ கல்வியை எதிர்ப்பவர்கள் தங்களை புதுப்பித்துக் கொள்ளாததால்தான் இதுபோன்ற கேள்விகளை முன்வைக்கின்றனர்.

தற்போது, தமிழக அரசால், முத்தமிழ் அறிஞர் மொழிப்பெயர்ப்பு திட்டத்தின் மூலம் மருத்துவ நூல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த நூல்களில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட சொற்களுக்கு இணையான ஆங்கில சொற்களும் தொகுத்து வழங்கப்படுகின்றன.

இந்த முறை மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கும், கட்டுரை உள்ளிட்ட ஆய்வுகளுக்கும் பயன்படும். தாய்மொழியில் பாடங்களை கற்கும்போது, புரிந்துகொள்வது என்பது வாசித்த நொடியில் இருந்தே தொடங்கிவிடும். புரிந்து கொண்டவற்றை பயன்படுத்துவதும் எளிது. எனவே தான் மருத்துவக் கல்வி தாய்மொழியில் இருத்தல் இன்றியமையாதது.

தற்போது தமிழக அரசு சார்பில் தமிழ் மொழியில் மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளது வரவேற்புக்குரியது. மேலும், பட்ட மற்றும் பட்டமேற்படிப்புக்கான மருத்துவ பாட நூல்களை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும்.

மருத்துவத்தை கற்பிக்கும் மொழியாக தமிழே இருக்க வேண்டும். பல்கலைக்கழகத் தேர்வுக்கான கேள்விகளை தமிழில் வடிவமைத்தும், தேர்வுகளைத் தமிழிலேயே நடத்த வேண்டும். மருத்துவ மாநாடுகளில் பேச்சுகளை தமிழில் மொழிபெயர்ப்பதற்கான நிகழ்நேர விளக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அனைத்து ஆய்விதழ்களின் கட்டுரைகளைத் தமிழில் மொழி

பெயர்த்து வழங்க வேண்டும். இதை நடைமுறைப்படுத்தினால், நன்கு ஆழமாக கற்று கொண்ட மருத்துவர்களையும், விஞ்ஞானிகளையும் நாம் பெறலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT