ராஜேஸ்வரி

 
கல்வி

யுபிஎஸ்சி தேர்வில் தேசிய அளவில் 2-ம் இடம் பிடித்து மதுரை ராஜேஸ்வரி சாதனை!

‘நான் முதல்வன்’ திட்டம் உதவியதாக பகிர்வு

என்.சன்னாசி

மதுரை: ஐஏஎஸ் உட்பட சிவில் சர்வீஸ் பதவிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வில் தேசிய அளவில் 2-வது இடம் பிடித்து மதுரை வாடிப்பட்டி எலக்ட்ரிக்கல் கடைக்காரர் மகள் ராஜேஸ்வரி சாதனை புரிந்துள்ளார். டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று துணை ஆட்சியராகி, சென்னை தலைமைச் செயலகத்தில் பயிற்சி அதிகாரியாக உள்ள இவர், தனக்கு ‘நான் முதல்வன்’ திட்டம் உதவியதாக குறிப்பிட்டுள்ளார்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் முருகதாஸ். இவர், கேவி என்ற பெயரில் எலக்ட்ரிக்கல் கடை நடத்துகிறார். இவரது மனைவி நாகராணி அந்தப் பகுதியிலுள்ள அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரி ஒன்றில் கணிதத் துறை உதவி பேராசிரியையாக பணியாற்றுகிறார். இவர்களுக்கு ராஜேஸ்வரி என்ற மகளும், குமாரசெல்வன் என்ற மகனும் உள்ளனர்.

ராஜேஸ்வரி 2018-ல் பிஇ (இஇஇ) முடித்துவிட்டு போட்டித் தேர்வுக்கு தயாரானார். ஏற்கெனவே 3 முறை யுபிஎஸ்சி தேர்வு எழுதிய நிலையில், 2024-ல் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று துணை ஆட்சியராகி தற்போது சென்னை தலைமை செயலகத்தில் பயிற்சி அதிகாரியாக இருக்கிறார்.

இந்த நிலையில், அவர் பணிபுரிந்து கொண்டே ‘நான் முதல்வன் ’ திட்டத்தில் இணைந்து தொடர்ந்து இந்திய ஆட்சிப் பணிக்கான ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட

சிவில் சர்வீஸ் பதவிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வுக்கு முயற்சித்தார். 2025-ல் நடந்த யுபிஎஸ்சி தேர்வை எழுதினார். இதற்கான முடிவு வெளியான நிலையில், 958 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் வாடிப்பட்டி ராஜேஸ்வரி அகில இந்தியளவில் 2-வது இடத்தை பிடித்து சாதனை புரிந்துள்ளார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் ராஜேஸ்வரி கூறுகையில், ‘அரசு போட்டி தேர்வுக்கென தொடர்ந்து பயிற்சி பெற்று வந்தேன். 7 ஆண்டு தொடர் முயற்சி, உழைப்புக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது. இதற்கெல்லாம் காரணம் எனது பெற்றோர். அவர்கள் கொடுத்த ஒத்துழைப்பால் சாதித்து இருக்கிறேன்.

தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் அகில இந்தியளவில் 225 பேருக்கு தங்கி படிக்க, 10 மாதங்களுக்கு தமிழக அரசு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கி ஊக்கப்படுத்தியது. ஓரிரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு நானும் இந்தத் திட்டத்தில் இணைந்து பயிற்சி பெற்று வென்றிருக்கிறேன். இத்திட்டம் எனக்கு உதவியது’ என்றார்.

SCROLL FOR NEXT