ஒவ்வொரு குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கும் மிகவும் அவசியமானது கல்வி ஆகும். அத்தகைய கல்வியை அன்பான அணுகுமுறையோடும், அறிவியல் பார்வையோடும், சமுதாய வளர்ச்சிக்கான அக்கறையோடும் வழங்கும் மிகப் பெரிய பொறுப்பும் கடமையும் ஆசிரியர்களிடம் உள்ளது.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்று ஆசிரியர்களை என்றென்றும் வணங்குவதற்குரிய இடத்தில் வைத்து ஆசிரியர்களைப் பாராட்டுகின்றோம். நமக்கு ஒழுக்கம், தன்னம்பிக்கை, பொது அறிவு, சமுதாய பார்வை என அனைத்தையும் வகுப்பறை கல்வியின் ஊடாகப் போதித்து, நம் வாழ்வின் வெற்றிக்கான உண்மையான வழிகாட்டியாக விளங்கும் சிறப்புக்குரியவர்கள் நமது ஆசிரியர்களே. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்.5-ஆம் தேதி, ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
‘தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்ட ஆசிரியரால்தான், சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும்’ என்பதை உலகுக்கு உணர்த்தியர் டாக்டர் ராதாகிருஷ்ணன். ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தன்று, கல்வித் துறையில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு மாநில அரசு சார்பில் ‘டாக்டர் இராதாகிருஷ்ணன்’ பெயரிலான விருதுகளையும், மத்திய அரசின் சார்பில் ‘தேசிய நல்லாசிரியர்’ விருதுகளையும் வழங்கி வருகிறது.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழும் கடந்த ஆறு ஆண்டுகளாகச் சிறப்பான கல்விப் பணியை மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடு செய்துவரும் ஆசிரியர்களைப் பாராட்டி, ‘அன்பாசிரியர்’ விருது வழங்கி, கவுரவித்து வருகிறது. கல்விப் பணியை மிகுந்த அர்ப்பணிப்போடு ஆற்றிவரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் ’இந்து தமிழ் திசை’ நாளிதழின் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள். இன்றைய மாணவச் சமுதாயமானது, தனக்கான ஆசிரியர் எப்படிப்பட்டவராக இருக்கிறார், எப்படிப்பட்டவராக இருக்க வேண்டுமென்பதை இந்த இனிய நாளிற்கான ஆசிரியர் தின வாழ்த்தாக இங்கே பகிர்ந்துகொள்கிறார்கள். எழுத்தறிவித்த இறைவனாக விளங்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்.
திறமைகளை வெளிக்கொண்டு வருபவர்கள்…
நான் எப்பவுமே படிப்பிலே மட்டும் தான் கவனம் செலுத்துவேன். மற்ற எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டிலே நான் கலந்துக்கவே மாட்டேன். இதையெல்லாம் என்னோட டீச்சர்ஸ் ரொம்ப நாளா நோட் பண்ணிக்கிட்டுத்தான் இருந்திருக்காங்க. ஒரு நாள் என்கிட்டே வந்து, “படிப்பு ரொம்ப முக்கியம்தான். ஆனா, நீ மத்த எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டிலேயும் கலந்துக்கிட்டு, உன்னோட திறமைகளை வெளிக்கொண்டு வரணும்”னு அன்பாகச் சொன்னாங்க. அப்பத்தான் எனக்குப் புரிஞ்சது.
அதுக்கப்புறம் எல்லாத்திலேயும் நானும் கலந்துக்க ஆரம்பிச்சேன். மாவட்ட அளவில் ஜெயிச்சு, மாநில அளவிலான போட்டிகளில் பங்கெடுத்தேன். இது என்னோட டீச்சர்ஸ்னாலே தான் நடந்தது. வீட்டிலேயே இருந்த நான், இப்ப புராஜெக்ட் செய்ய வெளியிலேயும் போயிட்டு வர்றேன். டீச்சர்ஸ் தர்ற என்கரேஜ்னாலேதான், ஸ்டூடண்ட்ஸ் நல்ல நிலைக்கு வர்றாங்க. டீச்சர்ஸை நாம எப்பவுமே மதிச்சு நடக்கணும். தாங்க்ஸ் டூ மை டீச்சர்ஸ். ஹாப்பி டீச்சர்ஸ் டே.
- எஸ்.ஹர்ஷினி, எட்டாம் வகுப்பு, அரசு மேனிலைப்பள்ளி, செங்கல்பட்டு.
வாழ்க்கையையே மாற்றுவிடும் சக்தி...
எந்த பாடத்தைப் படிக்க வேண்டும், எப்படிப் படிக்க வேண்டும் என்பதைச் சொல்வதோடு, எப்படி வாழ வேண்டும் என்பதையும் சொல்பவரே எங்களுக்குப் பிடித்த ஆசிரியராகிறார். நன்றாகப் படிக்கும் மாணவனைப் பாராட்டுவதைப் போலவே, பேச்சு, கவிதை, ஓவியம், நடனம் என பல திறமைகள் உள்ள மாணவனையும் பாராட்டி, ஊக்கப்படுத்த வேண்டியவர் ஆசிரியரே ஆவார்.
நல்ல ஆசிரியர் சொல்லும் ஒரு வார்த்தையானது அந்த மாணவனின் வாழ்க்கையையே மாற்றிவிடும் சக்தி படைத்தது. மாணவர்களின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி சொல்வது ஒவ்வொரு மாணவனின் கடமையுமாகும்.
- அ.அனிருத், எட்டாம் வகுப்பு, வேலம்மாள் வித்யாலயா இணைப்புப் பள்ளி, சென்னை.
கலகலப்பான தமிழ் பாட வகுப்பு
நான் பத்தாவது படிக்கும்போது எனக்கு தமிழ்ப் பாடம் நடத்திய ஆசிரியரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். எனக்கு மட்டுமில்லை, எங்கள் வகுப்பில் இருக்கும் எல்லா மாணவர்களுக்கும் பிடித்த ஆசிரியர் அவர்தான். எல்லா மாணவர்களோடும் ரொம்ப ஃபிரெண்ட்லியா பழகுவாங்க. அவங்க நேரத்தைச் சரியா கடைப்பிடிப்பாங்க.
எல்லா வகுப்பையும் ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா எடுப்பாங்க. பாடங்களை மட்டும் நடத்தாமல் எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டிலே கலந்துக்க நமக்கு ரொம்ப உதவியா இருப்பாங்க. தமிழ் நாடகங்கள்ல நான் நடிப்பதற்கு அவங்களே காரணம். பேச்சுப்போட்டி மற்றும் திருக்குறள் போட்டிகள் நான் கலந்துக்கிறதுக்கும் அவங்க தான் காரணமாக இருந்தாங்க.
- ராகுல் ரமேஷ், பதினோராம் வகுப்பு, சென்னை பப்ளிக் ஸ்கூல், சென்னை.
எனக்குப் பிடித்த கணக்கு டீச்சர்
எனது ஆசிரியர்கள் அனைவரையுமே எனக்குப் பிடிக்கும் என்றாலும், எனக்கு மிகவும் பிடித்தவர் கணக்கு ஆசிரியரே. கணக்கு என்றாலே பொதுவாக எல்லோருக்கும் கொஞ்சம் பயம் முதலில் இருக்கும். எனக்கும் அப்படியே இருந்தது. ஆனால், எனது கணக்கு ஆசிரியர் எவ்வளவு சிக்கலான கணக்கையும், புரியும்படி அழகாகச் சொல்லிக்கொடுப்பார்.
எனக்குப் புரியாத கணக்கொன்றை நான் திரும்பத் திரும்பக் கேட்டாலும், பொறுமையாக எனக்கு விளக்கிச் சொல்வார். கணக்கு மட்டுமில்லாமல், எனக்கு நிறைய வாழ்க்கைப் பாடங்களையும் சொல்லிக்கொடுத்துள்ளார். எனக்குள் ஒரு கான்பிடன்ஸை உண்டாக்கி இருக்காங்க. என்கரேஜ் செய்வாங்க. அதே மாதிரி, மோட்டிவேட் செய்வாங்க. எனக்கு இவ்வளவு தூரம் சப்போர்ட்டா இருக்கும் டீச்சர்ஸ் அனைவருக்கும் வாழ்த்துகள்.
- ர.அபிநயா, பதினோராம் வகுப்பு, வேல்ஸ் குளோபல் ஸ்கூல், சென்னை
மதிப்பெண்ணை மட்டும் மதிப்பிடக்கூடாது…
ஒரு மாணவியாக நான் எப்போதும் எனது ஆசிரியர் என்னைப் புரிந்துகொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கிறேன். மாணவர்கள் சில நேரங்களில் தங்களை அறியாமல் தவறு செய்யக்கூடும். மாணவர் செய்த அந்த ஒரு தவறை மட்டுமே மனதில் கொண்டு, ஒட்டுமொத்தமாக அந்த மாணவரைப் பற்றி ஆசிரியர் ஒரு தீர்மானத்திற்கு வந்துவிடக் கூடாது. எந்த செயல் நடைபெற்றாலும் அதைப் பற்றி உடனடி முடிவுகளை எடுக்காமல், பல கோணத்திலும் தீர விசாரிக்க வேண்டும். மேலும், மாணவர்களின் கருத்தினையும் அவசியம் கேட்க வேண்டும்.
வகுப்பில் நன்றாகப் படிக்கும் மாணவர்கள் மீது மட்டுமே கவனத்தைச் செலுத்தாமல், சுமாராகப் படிக்கும் மாணவர்கள் மீது கூடுதல் கவனத்தைச் செலுத்தி, அனைவரையும் சமமாக நடத்திட வேண்டும். மதிப்பெண்களை வைத்து மட்டுமே மாணவர்களை மதிப்பிடாமல், அவர்களிடமிருக்கும் பிற திறமைகளையும் அடையாளம் கண்டு பாராட்டுபவரே சிறந்த ஆசிரியர்.
- எஸ்.லேகா அதிதி, பன்னிரண்டாம் வகுப்பு, லிட்டில் ஜாக்கி மேனிலைப்பள்ளி, செங்கல்பட்டு.
விதைகளை விருட்சங்களாக்கும் ஆசிரியர்
அன்னைக்கு ஈடான அன்பினையும், தந்தைக்கு ஈடான அரவணைப்பையும் எனக்களித்து, என் அறியாமையைப் போக்கி, எனது அறிவுக்கண்ணைத் திறந்து வைப்பவரே சிறந்த ஆசிரியர். எண்ணையும் எழுத்தையும் என் எண்ணத்தில் விதைத்து, தூய அன்பால் மாணவ உள்ளங்களை வென்று, அறப்பணியாகக் கல்விப்பணியைச் செய்பவரே எனக்கு மட்டுமல்ல, எல்லா மாணவர்களுக்கும் பிடித்த ஆசிரியர்கள். விதைகளாக இருக்கும் எங்களை நாளைய விருட்சங்களாக மாற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் என் அன்பு நிறைந்த வாழ்த்துகள்.
- மு.தமிழ்வாணன், ஆறாம் வகுப்பு, அரசு மேனிலைப்பள்ளி, இராமாபுரம்.