கல்வி

“கல்லூரி மாணவர்களின் தேவை, பயன்பாட்டுக்கு ஏற்ப வெவ்வேறு மடிக்கணினிகள் வழங்கப்படும்” - அமைச்சர் பி.விஸ்வநாதன்

ஜெ.கு.லிஸ்பன் குமார்

சென்னை: தேவை, பயன்பாட்டுக்கு ஏற்ப கலை, அறிவியல், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு வெவ்வேறு மடிக்கணினிகள் வழங்கப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் பி.விஸ்வநாதன் கூறினார்.

முந்தைய அதிமுக, திமுக ஆட்சிக்காலங்களில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான மடிக்கணினிகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய கல்வி நாள் மற்றும் தேசிய உருது நாள் விழா சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று (புதன்கிழமை) கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் பேசியது: “கல்லூரி மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், அதிநவீன மடிக்கணினிகளை மிக விரைவில் வழங்குவதற்காக தமிழக முதல்வர் விஜய் ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுவிட்டது.  

மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள், பொறியியல் கல்லூரிகளில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள், தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் மருத்துவம், இளங்கலை வேளாண்மைப் பிரிவுகளில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்கள் பயன்பெறுவர்.

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் மடிக்கணினிகளை அவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மாணவர்களின் படிப்புத் துறைக்கு ஏற்ப அதிநவீனத் தொழில்நுட்ப வசதிகளுடன் வெவ்வேறு கட்டமைப்புத் திறன்களை (Configuration) கொண்ட மடிக்கணினிகள் வடிவமைக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களின் தேவைகளுக்கு ஒரு விதமான கட்டமைப்பும், பொறியியல் மாணவர்களின் பயன்பாட்டுக்குத் தகுந்தவாறு மேம்பட்ட மற்றொரு விதமான கட்டமைப்பும் கொண்ட மடிக்கணினிகளாக வழங்கப்படும்.

இவ்வாறு மாணவர்களுக்கு இடையே வெவ்வேறு வகையான மடிக்கணினிகள் வழங்கப்படுவது எந்தவொரு பாகுபாடும் காட்டுவதற்காக அல்ல. மாறாக, பொறியியல் படிப்புக்கான சாஃப்ட்வேர் தேவைகளும், கலை மற்றும் அறிவியல் படிப்புக்கான தேவைகளும் மாறுபடும்.  மாணவர்கள் படிக்கும் கல்விக்குத் தகுந்த சரியான மடிக்கணினியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், மாணவர்களின் கல்வித் தரம், நடைமுறைப் பயன்பாடு மற்றும் அவர்களின் எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, துறை சார்ந்த கல்விக்கு ஏற்றவாறு மடிக்கணினிகள் விரைவில் முழுமையாக வழங்கப்படும்” என்று அமைச்சர் விஸ்வநாதன் கூறினார்.

இந்த விழாவில்  தமிழ்நாடு மாநில உருது கழக துணை தலைவர் முகமது நயீமூர் ரகுமான், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் கே.நவாஸ் கனி, முன்னாள் எம்எல்ஏ கே.எம்.அபுபக்கர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் பேராசிரியர் எஸ்.ஆர்ம்ஸ்ட்ராங், பதிவாளர் ரீட்டா ஜான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT