கல்வி

அரசுப் பள்ளிகளில் ‘காக்கா முட்டை’ திரைப்படம்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ‘காக்கா முட்டை’ திரைப்படத்தை ஒளிபரப்ப உத்தர விடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட் டுள்ள சுற்றறிக்கை: அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது.

அதன்படி நடப்பு மாதம் ‘காக்கா முட்டை’ எனும் திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. 2014-ம் ஆண்டு இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம், சென்னையில் குடிசைவாழ் பகுதியில் வசிக்கும் 2 சிறுவர்கள் பற்றிய கதையாகும்.

இந்த படத்தை ஒளிபரப்பு செய்வதற்கான இணைப்பு லிங்க் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்குரிய பாடவேளைகளில் படத்தை திரையிட வேண்டும். இந்தப் பணிகளை கண்காணித்து ஒருங்கிணைக்க பள்ளிகளில் பொறுப்பாசிரியர்களை நியமிக்க வேண்டும்.

படம் திரையிடும் முன்பு அந்த படத்தை பொறுப்பு ஆசிரியர் பார்க்க வேண்டும். அதன்பின் கதைச் சுருக்கத்தையும், படத்தின் அடிப்படை பின்னணியையும் மாணவர்களுக்கு விளக்க வேண்டும்.

மாநில அளவில் நடைபெறும் சிறார் திரைப்பட விழாவில் சிறந்து விளங்கும் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள். இதற்கான அறிவுறுத்தல்களை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

SCROLL FOR NEXT