சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மைத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டது. நாடு முழுவதும் 12 பேர் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
நம்நாட்டில் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரு பிரிவாக நடைபெறும்.
இதில் முதன்மைத் தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2026-27-ம் கல்வியாண்டுக்கான முதல்கட்ட முதன்மை தேர்வு நாடு முழுவதும் 658 மையங்களில் கடந்த ஜனவரி 21 முதல் 28-ம் தேதி வரை நடைபெற்றது.
இந்தத் தேர்வை எழுத 13 லட்சத்து 55,293 பேர் விண்ணப்பித்தனர். 13 லட்சத்து 4,653 பேர் தேர்வில் கலந்துகொண்டனர். அதற்கான தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. மாணவர்கள் https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளம் மூலம் தங்கள் முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
இத்தேர்வில் மொத்தம் 12 பேர் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக மாணவர் பி.அஜய் 99.99% மதிப்பெண் பெற்று தேசிய அளவில் 15-வது இடம் பிடித்தார். புதுச்சேரி மாணவர் எச்.கார்த்திகேயன் 99.96 சதவீதம் மதிப்பெண் 25-வது இடமும் பெற்றார்.
இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம். இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் மாணவர்கள் 011-40759000/69227700 ஆகிய தொலைபேசி எண்கள் அல்லது jeemain@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ அளித்துள்ளது.
அடுத்தகட்டமாக ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தேர்வு ஏப்ரல் 1 முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. விருப்பமுள்ளவர்கள் இணையவழியில் பிப்ரவரி 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.