கோப்புப் படம்
சென்னை: இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்தில் பங்கேற்க விரும்பும் பள்ளி மாணவர்கள் மார்ச் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
பள்ளி மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ‘யுவிகா’ என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்தது.
இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் மற்றும் செய்முறை விளக்கப் பயிற்சிகளும் அளிக்கப்படும். இதற்காக நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் தலா 3 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்படி, இந்த ஆண்டுக்கான ‘யுவிகா’ பயிற்சி மே 11 முதல் 22-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த பிப். 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு விண்ணப்பிக்கும் கால அவசம் மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது.
எனவே, விருப்பம் உள்ளவர்கள் https://jigyasa.iirs.gov.in/yuvika என்ற இணையதளம் வழியே துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பயிற்சிக்குத் தேர்வாகும் மாணவர்களின் தற்காலிக பட்டியல் ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகும். அந்த மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
7 மையங்களில் பயிற்சி: அதன்பிறகு, சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு இறுதிப் பட்டியல் ஏப்ரல் 20-ல் வெளியிடப்படும். தேர்வாகும் மாணவர்களுக்கு திருவனந்தபுரம், ஸ்ரீஹரிகோட்டா உட்பட இஸ்ரோவின் 7 ஆய்வு மையங்களில் பயிற்சி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.