கல்வி

ஆம்பூர் பெத்லகேம் பள்ளியில் புதுமையான ஆங்கில பூங்கா - கல்வியாளர்கள், பெற்றோர் வரவேற்பு

மாணவர்களின் மொழித்திறனை மேம்படுத்த முயற்சி

என்.சரவணன்

திருப்பத்தூர்: மாணவர்களின் மொழித்திறனை மேம்படுத்த புதுமையான ஆங்கில பூங்காவை அரசு பள்ளி ஆசிரியர் ஏற்படுத்தியுள்ளது கல்வியாளர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

​திருப்பத்தூர் மாவட்​டம் ஆம்​பூர் பெத்​ல​கேம் நகராட்சி நடுநிலை பள்ளி மாண​வர்​களின் ஆங்​கில மொழித்​திறனை மேம்​படுத்​தும் நோக்​கில் புது​மை​யான ஆங்​கில பூங்கா அமைக்​கப்​பட்​டுள்​ள​தாக அப்​பள்ளி ஆசிரியர் சி.சர​வணன் தெரி​வித்​தார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்தி​யாளரிடம் ஆசிரியர் சி.சர​வணன் கூறும்​போது, ‘‘தேசிய கல்விக் கொள்கை (NEP 2020) அடிப்​படை​யில் இந்த ஆங்​கில பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்​பூங்​கா​வில் ஃ போனிக்ஸ் மலர்​கள், சொற்களஞ்சிய ரயில், டயர் நூல​கம், இலக்கண மூலை, வாசிப்பு பகு​தி, கேள்வி சக்​கரம் உட்பட பல்​வேறு கற்​றல் மையங்​கனை அமைத்துள்​ளோம்.

மறுசுழற்சி செய்​யப்​பட்ட பொருட்​களை கொண்டு குறைந்த செலவில் உரு​வாக்​கப்​பட்​டுள்ள இந்த பூங்​கா, மாண​வர்​கள் விளையாடிக்​கொண்டே ஆங்​கிலத்தை கற்​றுக்​கொள்ள உதவும். இதன் மூலம் மாண​வர்​களின் வாசிப்புத் திறன், எழுத்​துத்​திறன், பேச்சு மற்​றும் சொற்​களஞ்​சிய திறன்​கள் மேம்​படு​கின்றன.

கல்வி என்​பது புத்தக அறிவை மட்​டும் வழங்​கும் செயலாக இல்​லாமல், மாண​வர்​களின் திறன்​களை முழு​மை​யாக வெளிக்​கொண்டு வரும் ஒரு வாழ்க்கை முறை பயண​மாகும். குறிப்​பாக, மொழி கற்றல் என்பது வகுப்​பறை சுவர்​களுக்​குள் மட்​டும் இல்லாமல், அனுபவத்​தின் வாயி​லாக மாண​வர்​களிடம் சென்​றடைய வேண்டும் என்​பதை வலி​யுறுத்​துகிறது.

தேசிய கல்வி கொள்​கையை அடிப்​படை​யாக கொண்டு ஆம்பூர் பெத்லகேம் நகராட்சி நடுநிலை பள்​ளி​யில் இந்த புது​மை​யான ஆங்​கில பூங்கா உரு​வாக்கப்​பட்​டுள்​ளது. பள்ளி கல்​வி​யில் ஆங்கில மொழி ஒரு முக்​கிய பாட​மாக கருதப்​படுகிறது. இப் பூங்கா​வின் முக்​கிய அம்​ச​மாக ஃபோனிக்ஸ் மலர்​கள் அமைக்கப்பட்​டுள்​ளன. ஒவ்​வொரு மலரும் ஒரு எழுத்​தின் ஒலியைக் குறிக்​கும் வகை​யில் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது.

இதன் மூலம், மாண​வர்​கள் எழுத்​து​க்களின் ஒலியை தெளி​வாக உச்​சரிக்க கற்​றுக்​கொள்​கின்​ற​னர். சரி​யான உச்​சரிப்பு திறனை வளர்ப்​ப​தில் இந்த மையம் முக்​கிய பங்கு வகிக்கிறது. சொற்களஞ்​சிய ரயில் மாண​வர்​களிடையே அதிக வரவேற்பை பெற்​றுள்​ளது. ரயிலின் ஒவ்​வொரு பெட்​டி​யிலும் புதிய சொற்​கள், அவற்​றின் பொருள் மற்​றும் பயன்​பாடு இடம் பெற்​றுள்​ளன.

மாண​வர்​கள் விளை​யாட்​டின் மூலம் புதிய சொற்​களை கற்​றுக்​கொள்​வதோடு மட்​டுமல்​லாமல், அந்த சொற்​களை கொண்டு வாக்​கி​யங்​களை​யும் உரு​வாக்​கு​கின்​ற​னர். இலக்கண மூலை​யில் பெயர்ச்​ சொல், வினைச்​சொல், பெயரடை, காலங்​கள், வாக்​கிய அமைப்பு போன்ற இலக்கண கூறுகள் எளிமை​யான முறை​யில் காட்​சிப்​படுத்​தப்​பட்​டுள்​ளன. இதனால், மாண​வர்​கள் இலக்​கணத்தை மனப்​பாடம் செய்​வதற்கு பதிலாக, நேரடி​யாக புரிந்​து​கொண்டு கற்​றுக்​கொள்​கின்​ற​னர்.

இந்த புது​மை​யான முயற்சி பெற்​றோர்​கள், ஆசிரியர்​கள், கல்வித்துறை அலு​வலர்​கள் மற்​றும் கல்வி ஆர்​வலர்​களிடையே பெரும் வரவேற்பை பெற்​றுள்​ளன. பிற பள்​ளி​களும் இதனை முன்​மா​திரி​யாக கொண்டு இது​போன்ற கற்றல் மையங்​களை உருவாக்க முன்​வந்​துள்​ளன. மாண​வர்​கள் மகிழ்ச்​சி​யுடன் கற்​றுக்​கொள்​ளும் இந்த முயற்​சி. எதிர்​காலத்​தில் பல பள்​ளி​களில் செயல்படுத்தப்படும் ஒரு முன்னோடி மா​திரி​யாக விளங்​கும்​ என்​பதில்​ எந்​த ஐயமுமில்லை’’ என்​றார்​.

SCROLL FOR NEXT