படம்: எம். முத்துகணேஷ்

கல்வி

"உயர்கல்வி சேர்க்கை விகிதம் அதிகரித்தால் தான் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்” - வி.ஐ.டி வேந்தர் கோ.விசுவநாதன் பேச்சு

பெ.ஜேம்ஸ் குமார்

சென்னை: “உயர்கல்வியில் இந்தியாவின் மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் 28 சதவீதம் மட்டுமே உள்ளது. தமிழ்நாட்டில் இந்த விகிதம் 47 சதவீதமாக மிக உயர்ந்த ஒன்றாக உள்ளது. அனைத்து மாநிலங்களும் உயர்கல்வியில் தங்கள் செயல்திறனை மேம்படுத்த வேண்டும். அப்போதுதான் இந்தியா ஒரு முன்னேறிய மற்றும் வளர்ந்த நாடாக மாறும்” என்று வி.ஐ.டி வேந்தர் கோ.விசுவநாதன் கூறினார்.

வி.ஐ.டி. சென்னையின் 14-வது பட்டமளிப்பு விழா இன்று பல்கலைக்கழக வளாகத்தி நடைபெற்றது. விழாவுக்கு வி.ஐ.டி. நிறுவனர் மற்றும் வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார். வி.ஐ.டி. துணைத் தலைவர்கள் முனைவர் சங்கர் விசுவநாதன், முனைவர் ஜி.வி.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வி.ஐ.டி. பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன் வரவேற்புரை நிகழ்த்தினார். விழாவில், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் முன்னாள் செயலாளர் டாக்டர் தி.ராமசாமி தலைமை விருந்தினராகவும், தென்னிந்தியாவிற்கான இலங்கை நாட்டின் துணைத் தூதர் டாக்டர் கணேசநாதன் கீதீஸ்வரன் சிறப்பு விருந்தினராகவும், பென்னட் கோல்மன் அண்ட் கோ லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி (பதிப்பகம்) மோஹித் ஜெயின் கவுரவ விருந்தினராகவும் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினர். விழாவில் 41 மாணவ, மாணவிகளுக்கு தங்கப் பதக்கங்கள் உள்பட மொத்தம் 4,518 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

தலைமை விருந்தினர் டாக்டர் தி.ராமசாமி பேசியதாவது: “இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு உயர்கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் (GER) மிகவும் குறைவாக இருந்தது. தற்போது அது அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு 740 பொறியியல் மாணவர்கள் மட்டுமே பட்டம் பெற்றனர். இன்று மாநிலத்தில் லட்சக்கணக்கான பொறியியல் மாணவர்கள் பட்டம் பெற்று வருகின்றனர்.

2000-ம் ஆண்டு முதல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தமிழ்நாடு ஒரு முன்னணி மாநிலமாக உருவெடுத்துள்ளது. இது ஆய்விதழ்களில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் எண்ணிக்கையின் மூலம் தெரியவருகிறது.

உலக இளைஞர் தொகையில் 29 சதவீதம் பேர் இந்திய இளைஞர்கள். ஒரு புதிய உலகத்தை வடிவமைப்பதற்கான போதுமான ஆற்றலும் திறனும், உலகை மாற்றுவதற்கான நம்பிக்கையும் இந்திய இளைஞர்களிடம் உள்ளது. குறிப்பாக, இந்திய இளைஞர்களிடம் பொருளாதார வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் நீடித்த வளர்ச்சியுடன் இணைப்பதற்கான தெளிவும் திறன்களும் உள்ளன” என்றார்.

உயர்கல்வியில் கவனம் தேவை:

விழாவில் வி.ஐ.டி. நிறுவனர் மற்றும் வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் பேசுகையில், “இந்தியாவின் மக்கள் தொகையில் சுமார் 13 சதவீதம் பேர் மட்டுமே பட்டதாரிகள். பட்டம் பெறும் மாணவர்கள் நாட்டின் எதிர்காலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். இந்தியா ஒரு வளரும் நாடு. ஆனால் கல்வியின் வளர்ச்சி வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இல்லை. கனடாவில் தகுதியுள்ள இளைஞர்களில் 64 சதவீதம் பேர் பட்டதாரிகளாக உள்ளனர்.

அதே நேரத்தில் தென் கொரியா மற்றும் ஜப்பானில் இந்த விகிதம் சுமார் 53 சதவீதமாக உள்ளது. இன்றைய இளைஞர்கள் நாட்டின் எதிர்காலத் தலைவர்களாக உருவெடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தியா எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிப்பதிலும் அவர்கள் முக்கியப் பங்காற்றுவார்கள்.

உயர்கல்வியில் இந்தியாவின் மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் (GER) சுமார் 28 சதவீதம் மட்டுமே உள்ளது. தமிழ்நாட்டில் இந்த விகிதம் சுமார் 47 சதவீதமாக மிக உயர்ந்த ஒன்றாக உள்ளது. அதேசமயம் பீகாரின் விகிதம் சுமார் 17 சதவீதமாக மிகக் குறைவாக உள்ளது. அனைத்து மாநிலங்களும் உயர்கல்வியில் தங்கள் செயல்திறனை மேம்படுத்த வேண்டும். அப்போதுதான் இந்தியா ஒரு முன்னேறிய மற்றும் வளர்ந்த நாடாக மாறும். மத்திய, மாநில அரசுகள் உயர்கல்விக்கு அதிக கவனம் செலுத்தி, நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்” என்றார்.

தென்னிந்தியாவிற்கான இலங்கை நாட்டின் துணைத் தூதர் டாக்டர் கணேசநாதன் கீதீஸ்வரன் பேசுகையில்: “இந்தியாவும் இலங்கையும் ஒரு குறுகிய நீர்ப்பரப்பால் பிரிக்கப்பட்டிருந்தாலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாறு, கலாச்சாரம், மதம், மொழி, வர்த்தகம் மற்றும் மனித உறவுகளால் இணைக்கப்பட்டுள்ளன. இரு நாடுகளுக்கு இடையேயான உறவு ஆழமான மனிதநேயம் மற்றும் நாகரிகம் சார்ந்ததாகும். குறிப்பாக, தமிழ்நாடும் இலங்கையும் ஆழமான கலாச்சாரம் மற்றும் வரலாற்றுத் தொடர்புகளைக் கொண்டுள்ளன. இரு நாடுகளுக்கு இடையேயான உறவு ராஜதந்திரம் மற்றும் வர்த்தகத்தின் மூலம் மட்டுமல்லாமல், கல்வி, தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் இளைஞர்களின் மூலமாகவும் கட்டமைக்கப்பட வேண்டும்” என்றார்.

பென்னட் கோல்மன் அண்ட் கோ லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி (பதிப்பகம்) மோஹித் ஜெயின் பேசும்போது: “பல கனவுகளுடன் பட்டம் பெறும் மாணவர்கள் கடினமாக உழைத்து வாழ்வில் முன்னேற வேண்டும். வெற்றிகள் மீது மட்டும் அதீத கவனம் செலுத்தாமல், செய்யும் பணியைத் தொய்வின்றி மகிழ்ச்சியாக செய்தால் வாழ்வில் வெற்றி தேடி வரும்” என்றார்.

விழாவில் வி.ஐ.டி. துணைத் தலைவர் முனைவர் ஜி.வி.செல்வம் நன்றியுரை வழங்கினார். விழாவில் வி.ஐ.டி. வேலூரின் இணை துணை வேந்தர் முனைவர் பார்த்தசாரதி மாலிக், வி.ஐ.டி. சென்னை இணை துணை வேந்தர் முனைவர் த.தியாகராஜன், இயக்குநர் முனைவர் கே.சத்தியநாராயணன், வி.ஐ.டி. பதிவாளர் முனைவர் ஜெயபாரதி, வி.ஐ.டி. சென்னையின் கூடுதல் பதிவாளர் முனைவர் பி.கே.மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT