கல்வி

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் இடங்கள் அதிகரிப்பு

தமிழக சுகாதாரத் துறை அரசாணை வெளியீடு

செய்திப்பிரிவு

சென்னை: அரசு மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான ஒதுக்கீட்டில் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கான அரசானையை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக நேற்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: திறமையான விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து அவர்களது உயர்கல்வி முன்னேற்றத்தை உறுதி செய்யகல்லூரிகளில் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கடந்த 1994-95-ம் கல்வி ஆண்டில் தமிழக அரசின் மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் விளையாட்டு ஒதுக்கீட்டின்கீழ் முதல்கட்டமாக 3 இடங்கள் வழங்கப்பட்டன.

பின்னர், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்ததை கருத்தில் கொண்டு, 2018 ஜூன் 1-ம் தேதி வெளியிட்ட அரசாணையில், விளையாட்டு ஒதுக்கீட்டின்கீழ் வழங்கப்படும் இடங்கள் 3-ல் இருந்து 8 ஆக உயர்த்தப்பட்டது. எம்பிபிஎஸ் படிப்பில் 7 இடங்கள், பிடிஎஸ் படிப்பில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டு, 2018-19-ம் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், மருத்துவ, பல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டு ஒதுக்கீட்டின்கீழ் சேர்க்கைக்கான இடங்களின் எண்ணிக்கையை உயர்த்தி வழங்குமாறு வீரர்கள் கோரிக்கை வைத்தனர். இதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, துணை முதல்வர் உதயநிதி தலைமையில் நடைபெற்ற 47-வது செயற்குழுக் கூட்டத்தில், விளையாட்டு ஒதுக்கீட்டின்கீழ் கல்லூரி சேர்க்கைக்கான இடங்களை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதில், விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் கல்லூரி சேர்க்கைக்கான இடங்களை உடனடியாக அதிகரிக்க ஒப்புதல்வழங்கப்பட்டது. இதற்கான முன்மொழிவை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டது.

இதையடுத்து, அரசு மருத்துவ, பல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டு ஒதுக்கீட்டின்கீழ் வழங்கப்படும் இடங்களை எம்பிபிஎஸ் படிப்பில் 7-ல் இருந்து 13 ஆகவும், பிடிஎஸ் படிப்பில் 1-ல் இருந்து 2 ஆகவும் அதிகரித்து அரசு அனுமதி வழங்கியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT