கல்வி

சென்னை ஐஐடியில் பிஎஸ் மேலாண்மை, தரவு அறிவியல் பட்டப்படிப்பு அறிமுகம்

செய்திப்பிரிவு

பிஎஸ் மேலாண்மை மற்றும் தரவு அறிவியல் எனும் 4 ஆண்டு இளநிலை அறிவியல் பட்டப் படிப்பை, சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய பட்டப் படிப்புகள் தொடர் பான அறிமுக நிகழ்ச்சி சென்னை ஐஐடி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அதன் பின்னர், சென்னை ஐஐடி இயக்குநர் வீ.காம கோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை ஐஐடி சார்பில் ஏற்கனவே தரவு அறிவியல், எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ், ஏரோனாட்டிக்ஸ் ஸ்பேஸ் டெக் ஆகிய 3 பிஎஸ் இளநிலை அறிவியல் படிப்புகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. தற்போது 4-வதாக மேலாண்மை மற்றும் தரவு அறிவியல் எனும் 4 ஆண்டு இளநிலை அறிவியல் படிப்பை அறிமுகப் படுத்துகிறோம்.

          

இந்த பிஎஸ் படிப்பில் சேரு வோரை வணிக ரீதியாக முடிவெடுத்தல், சிந்தித்து திட்டமிடல், தரவு சார்ந்த சிக்கல்களை தீர்க்கும் திறன் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெறச் செய்யும் வகையில் பாடத் திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த பாடத்திட்டத்தில் படித்து தேர்ச்சி பெறுவோருக்கு ஐஐடியின் இளநிலை அறிவியல் பட்டம் வழங்கப்படும். இது ஐஐடி வழங்கும் இதர இளநிலைப் பட்டங்களுக்கு நிகரான அங்கீகாரத்தைக் கொண்டிருக்கும்.

பிளஸ் 2 வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதியுள்ள டிப்ளமோ முடித்தவர்கள் உட்பட எவரும் இப்படிப்பில் சேரலாம். இதை தனிபட்டப் படிப்பாகவோ அல்லது வேறு கல்வித் திட்டத்துடன் இணைந்தோ அல்லது பணியில் இருந்து கொண்டே தொடரலாம். தகுதித் தேர்வு மூலமாகவோ அல்லது ஜேஇஇ பிரதானத் தேர்வில் கலந்துக் கொள்ளும் தகுதியைப் பெறுவதன் மூலமாகவோ இந்த படிப்பில் சேர்க்கப்படுகிறார்கள்.

இதன் வகுப்புகள் ஜூன் மாதம் தொடங்கும். இதற்கு மே 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த புதிய பிஎஸ் படிப்புக்கான பாடத்திட்டம், மாணவர் சேர்க்கை விவரங்களை ஐஐடி இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில், ஃபோர்டு மோட் டார் நிறுவனத்தின் இந்தியா பிரிவுத் தலைவர் கங்கப்ரியா சக்ரவர்த்தி, சுந்தரம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குநர் ராஜீவ் சி.லோச்சன், சென்னை ஐஐடி மேலாண்மைக் கல்வித் துறை தலைவர் சஜி மேத்யூ உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

SCROLL FOR NEXT