சென்னை: சூரியஒளி மின்சாரத்தை பயன்படுத்துவதில் முன்மாதிரியாக திகழ்ந்து, மகளிர் குழுக்களுக்கு தொழில் பயிற்சி வழங்கி வரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சாந்தஷீலா நாயரின் எபிக் மையத்தை, ஐஐடி இயக்குநர் காமகோடி பார்வையிட்டு பாராட்டினார்.
தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா, மு.கருணாநிதி ஆகிய 3 ஆளுமைகள் முதல்வர்களாக இருந்தபோது, அவர்களுடன் பணியாற்றி ஓய்வு பெற்றவர் சாந்தஷீலா நாயர்.
இவர், சோழிங்கநல்லூர் அடுத்த படூர் பகுதியில், தனது தந்தை வாங்கி வைத்திருந்த 33 சென்ட் பொட்டல் காட்டை சீரமைத்து, கடந்த 2021-ம் ஆண்டு எபிக் மையமாக (Eco Park Information Centre – EPIC) உருவாக்கினார்.
அங்கு, அப்பகுதி மகளிர் குழுக்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, இயற்கை உரம் தயாரிப்பு, இயற்கை வேளாண்மை உள்ளிட்டவை குறித்து களப்பயிற்சி வழங்கி வருகிறார்.
அங்கு பல்வேறு தாவரங்களை இயற்கை முறையில் வளர்த்து, ஒரு மரகத சோலையாக மாற்றி உள்ளார். இதனால், இந்த பகுதி ரம்மியமாக காட்சியளித்து வருகிறது. மேலும், பள்ளி மாணவ, மாணவியரின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மையமாகவும் அது விளங்கி வருகிறது.
இந்த மையத்தில் அடுத்த முன்னெடுப்பாக, சூரிய ஒளி மின்சார பயன்பாட்டில் முன்மாதிரி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அதன்படி, அங்கு சோலார் மின் விளக்கு, வேளாண் பொருட்களை சூரிய ஒளியில் உலர்த்தும் இயந்திரம், குடிநீரை கொதிக்க வைக்கும் இயந்திரம் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், சுமார் 5 கே.வி. திறன் கொண்ட சூரிய ஒளி பலகையும் அமைத்து, மின் வாரிய பவர் கிரிட்உடன் இணைத்துள்ளார். இந்த சூரிய ஒளி பலகை தயாரிக்கும் மின்சாரம் உடனுக்குடன் கிரிட்டுக்கு போய்விடும்.
அதன் பிறகு, இவர்களின் தேவைக்கு கிரிட்டிலிருந்து மின்சாரத்தை, அங்கு நடைபெறும் பயிற்சிகளுக்கு எடுத்து பயன்படுத்துகின்றனர். இதில் இவர்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை விட, பயன்படுத்தும் மின்சாரம் மிகவும் குறைவாக இருப்பதாக சாந்த ஷீலா நாயர் தெரிவித்தார்.
இந்த மையத்தின் செயல்பாட்டை, சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, தமிழக அரசின் மகளிர் மேம்பாடு நிறுவன மேலாண் இயக்குநர் சஜீவனா ஆகியோர் நேற்றுமுன்தினம் பார்வையிட்டு, சாந்தஷீலா நாயரின் முன்னெடுப்பை பாராட்டினர்.
அப்போது, படூர் கிராமத்தையும் சூரியஒளி மின்சாரத்தை பயன்படுத்துவதில் முன்மாதிரி கிராமமாக மாற்ற ஆலோசனை வழங்குமாறு, படூர் ஊராட்சி தலைவி தாரா சுதாகர் வேண்டுகோள் விடுத்தார்.