கோவை காந்திபுரத்தில் கட்டப்பட்டு வரும் பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தின் தரைத்தளப் பகுதியில் மேற்கொள்ளப்படும் பணிகள்.

 

படங்கள்: ஜெ.மனோகரன்

கல்வி

ஸ்பேஸ் லிப்ட், கோளரங்கம்... கோவையில் பிரம்மாண்டமாக உருவாகும் அறிவியல் மையம்!

டி.ஜி.ரகுபதி

கோவை: கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில், பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. தமிழக அரசின் பொதுப்பணித் துறையின் சார்பில், கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் மத்திய பேருந்து நிலையம் எதிரே, ரூ.300 கோடி மதிப்பில் ‘பெரியார் அறிவுலகம்’ எனப்படும் ‘பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம்’ கட்டும் பணி கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்டது.

திட்ட மதிப்பில், ரூ.245 கோடி கட்டுமானப் பணிக்கும், ரூ.50 கோடி புத்தகங்கள் வாங்குவதற்கும், ரூ.5 கோடி இ-புத்தகங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கோவை மத்திய சிறைக்கு சொந்தமான இடத்தில், மொத்தம் 6.98 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில், 1 லட்சத்து 98 ஆயிரம் சதுரடி பரப்பளவில், தரைத்தளம் மற்றும் 7 தளங்களுடன் இதன் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

          

இதுதொடர்பாக பொதுப்பணித் துறை மற்றும் நூலகப் பிரிவு உயரதிகாரிகள் கூறியதாவது: பெரியார் அறிவியல் மைய வளாகம் ஏ மற்றும் பி என இரு பிளாக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம், 350 பேர் அமரக்கூடிய ஆடிட்டோரியம், அறிவியல் உபகரணங்களுடன் கூடிய அறிவியல் மையம், விண்வெளியை கண்டுகளிக்கும் வகையில் கோளரங்கம், ஸ்பேஸ் லிப்ட் ஆகியவை அமைகின்றன.

துபாய் நாட்டின் அறிவியல் அருங்காட்சியகத்தில் உள்ளது போல, ஸ்பேஸ் லிப்ட் இங்கு அமைக்கப்பட்டு வருகிறது. தரைத்தளத்தில் இருந்து 7-வது தளம் வரை ஸ்பேஸ் லிப்ட் கட்டமைப்பு உள்ளது.

ஒருமுறை 15 பேர் அதில் அமர்ந்து பயணிக்கலாம். தரைத் தளத்திலிருந்து புறப்படும் இந்த லிப்ட் ஒவ்வொரு தளத்தை கடக்கும்போதும், வானத்தை கடந்து ‘ஸ்பேஸ் ஸ்டேஷன்’ சென்றது போல உணர்வு ஏற்படும் வகையில் இந்த லிப்ட் கட்டமைக்கப்படுகிறது.

அறிவியல் மையத்தின் முகப்பு பகுதி.

ஆசியாவில் முதல் முறையாக கோவையில்தான் ஸ்பேஸ் லிப்ட் அமைக்கப்படுகிறது. முதல் தளத்தில் அறிவியல் மையம், மற்றுத்திறனாளிகளுக்கான நூலகம் தொடர்கிறது. 2-வது தளத்தில் சொந்தமாக புத்தகம் எடுத்து வருபவர்கள் படிக்க குறிப்பிட்ட இடமும், சிறுவர்களுக்கான நூலகமும் அமைகிறது.

3-ம் தளத்தில் போட்டித் தேர்வு பயிற்சி மையம், நிர்வாகப் பிரிவு, நூலகம் ஆகியவை அமைகின்றன. 4-ம் தளத்தில் வரலாற்று புத்தகங்கள் பிரிவு, தமிழ் நூல்கள் பிரிவு, 5-வது தளத்தில் ஆங்கில நூல்கள் பிரிவு, ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான இன்குபேஷன் சென்டர், 6-வது தளத்தில் ஆங்கிலம் கற்கும் பிரிவு, இன்குபேஷன் சென்டர், 7-வது தளத்தில் அறிவியல் மையம் அமைகிறது.

நூலகம் மற்றும் அறிவியல் மையத்தின் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன. உட்புற வேலைப்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இம்மையத்தில் அனைத்துத் துறை சார்ந்த 1.25 லட்சம் எண்ணிக்கையிலான நூல்கள், புத்தகங்கள் வைக்கப்பட உள்ளன. இவை சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்து ஆர்டர் செய்து தொடர்ச்சியாக பெறப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT