சென்னை: உதவியாளர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட நிர்வாகப் பணிகளில் உள்ள 242 காலியிடங்களுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிர்வாக பணிகளில் 242 காலியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உதவியாளர் பதவியில் 120-ம், மேல்நிலை எழுத்தர் பணியில் 76-ம், இளநிலை நேர்முக உதவியாளர் பதவியில் 22-ம், சுருக்கெழுத்தர் பதவியில் 24-ம் என மொத்தம் 242 காலியிடங்கள் இடம்பெற்றுள்ளன.
உதவியாளர், மேல்நிலை எழுத்தர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பட்டப்படிப்பும் கணினி அறிவும் வேண்டும். இளநிலை நேர்முக உதவியாளர், சுருக்கெழுத்தர் பதவிகளுக்கு பட்டப்படிப்பும், சுருக்கெழுத்து பயிற்சியும் (நிமிடத்துக்கு 60 வார்த்தைகள்) அவசியம்.
அனைத்து பதவிகளுக்கும் வயது வரம்பு 28 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டும், ஓபிசி வகுப்பினருக்கு 3 ஆண்டும் மாற்றுத்திறனாளிகளுககு 10 ஆண்டும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் தட்டச்சு-சுருக்கெழுத்து தேர்வு அடிப்படையில் பணிக்கு தேர்வுசெய்யப்படுவர். தகுதியுள்ள பட்டதாரிகள் www.isro.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆகஸ்ட் 16-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.