புதுக்கோட்டை: 1-ம் வகுப்பு ஆங்கில வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஆசிரியர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய கல்வித்துறையின் வினோதமான போக்கு கண்டிக்கத்தக்கது என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் நா.சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காலாண்டுத் தேர்வில் முதல் வகுப்பு ஆங்கிலத் தேர்வு நடைபெற்றது. ஆனால், அதற்கான வினாத்தாள் கசிந்துவிட்டதால், ஏற்கெனவே தயாரித்துப் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வினாத்தாளைக் கொண்டு தேர்வு நடத்தாமல், புதிய வினாத்தாள்களை அலுவலகம் வந்து பெற்றுச் சென்று தேர்வு நடத்துமாறு ஆசிரியர்களுக்குக் கல்வித்துறை அலுவலர்கள் அவசர உத்தரவு பிறப்பித்தனர்.
மாணவர்கள் மகிழ்ச்சியாகக் கற்றதை வெளிப்படுத்தும் வகையில் தேர்வு முறை இருக்க வேண்டுமே தவிர, அச்சுறுத்தும் வகையில் இருக்கக் கூடாது. பள்ளியில் சேர்ந்து 3 மாதங்களே ஆன முதல் வகுப்பு குழந்தைகளுக்குப் பள்ளி அளவில் நடத்த வேண்டிய தேர்வை, மாநில அளவில் பொதுத்தேர்வாக நடத்துவது ஏற்புடையதல்ல.
முதல் வகுப்பு வினாத்தாள் விவகாரத்தில் 'ஒரே நாடு, ஒரே வினாத்தாள், ஒரே தேர்வு' என்ற ரீதியில் செயல்படுவது ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வருங்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் தொடக்கக்கல்வித் துறையில் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளித்தல், ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புதல், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டைக் களைதல், ஊக்க ஊதியம் வழங்குதல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கைகளில் காட்டாத வேகத்தை, 1-ம் வகுப்பு வினாத்தாளில் காட்டியிருப்பது வியக்க வைக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.