கோப்புப் படம்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் இணைய கேபிள் செலவை பிஎஸ்என்எல், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் ஏற்க மறுப்பதால் அரசுப் பள்ளிகளில் 10 மாதங்களாக ஸ்மார்ட் வகுப்பறை, தொழில்நுட்ப ஆய்வகம் இயங்காத நிலை உள்ளது.
தமிழகத்தில் அரசு நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள், தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டன. இதற்காக மாநிலம் முழுவதும் 28,000 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளிலும் பிஎஸ்என்எல் மூலம் 100 எம்பிபிஎஸ் வேகம் கொண்ட ‘பிராட் பேண்ட்’ இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், பல பள்ளிகள் நகரங்களில் இருந்து பல கி.மீ. தூரத்தில் உள்ள கிராமங்களில் இருக்கின்றன.
இதையடுத்து குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் கேபிள் கொண்டு செல்ல கூடுதல் செலவாகும் என்பதால் பிஎஸ்என்எல் சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் அதற்கான செலவு தொகை கேட்கப்பட்டது. இதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து சிவகங்கை மாவட்டத் தில் வாய்ப்பு இருந்தால் தனியார் இணைய இணைப்புப் பெற்று, உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகளை இயக்க பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
அதன் படி, சில தனியார் நிறுவனங்கள் மூலம் பள்ளிகளில் இணைய இணைப்பை ஆசிரியர்கள் பெற்றனர். இப்பள்ளிகளில் இணைய இணைப்புக்காக மாதந்தோறும் ரூ.1,500 வழங்கப்பட்டு வந்ததன. இந்நிலையில் கடந்த பிப்ரவரியில் அனைத்துப் பள்ளிகளிலும் பிஎஸ்என்எல் இணைப்புதான் பெற வேண்டும்.
மாதக் கட்டணத்தை அரசே பிஎஸ்என்எல் நிறுவனத்தில் செலுத்திவிடும் என்று கூறி பள்ளிகளுக்கு வழங்கிய ரூ.1,500-ஐ நிறுத்தினர். ஆனால், பல கட்டங்களாக பிஎஸ்என்எல், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் இணைந்து கூட்டம் நடத்தியும் கேபிள் கொண்டு செல்வதற்கான கூடுதல் செலவை யார் ஏற்றுகொள்வது என்ற குழப்பம் நீடிக்கிறது. இதனால் பல பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள் இயங்காமல் முடங்கிக்கிடக்கின்றன.
இதுகுறித்து ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: பிஎஸ்என்எல் இணைப்புப் பெற பள்ளிகளின் தூரத்துக்கு ஏற்ப ரூ.3,000 முதல் ரூ.30,000 வரை கூடுதலாகக் கேட்கின்றனர். அந்தச் செலவை பள்ளிக் கல்வித்துறையும், பிஎஸ்என்எல் நிறுவனமும் ஏற்க மறுக்கின்றன. ஏற்கெனவே தனியாரிடம் பெற்ற இணைய வசதிக்குரிய பணத்தையும் நிறுத்திவிட்டனர். இதனால் தொழில்நுட்ப ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள் முடங்கியுள்ளன.
பிஎஸ்என்எல் இணைப்பு வசதியுள்ள 10 சதவீத நகரப் பள்ளிகளில் மட்டுமே இயங்குகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர். இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘இணைய வசதியை பிஎஸ்என்எல் நிறுவனத்திடமே பெற அரசு கூறியுள்ளது. ஆனால், கேபிள் செலவை பிஎஸ்என்எல் நிறுவனம் ஏற்க மறுக்கிறது. தொடர்ந்து பேசி வருகிறோம்,’ என்றனர்.