படம் எம். சாம்ராஜ்

கல்வி

புதுச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் 70-ம் ஆண்டு விழா: ஒரு வார கண்காட்சி தொடக்கம்

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் 70-ம் ஆண்டையொட்டி ஒருவார நிகழ்வுகள், கண்காட்சிகள் தொடங்கின. மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பார்வையிட்டனர். பொதுமக்கள் வரும் 24, 25-ல் பார்க்க முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1955-ம் ஆண்டு பிரான்ஸ் மற்றும் இந்தியாவுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து புதுச்சேரியில் பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் நிறுவனம் தொடங்கப்பட்டது. ஆராய்ச்சி, கலாச்சாரம் மற்றும் இந்திய - பிரெஞ்சு கூட்டுறவை கொண்டாடும் வகையில் 70-ம் ஆண்டு கால நிகழ்வுகள் இன்று தொடங்கின. வரும் 28-ம் தேதி வரை ஒருவாரத்துக்கு இந்நிகழ்வுகள் நடக்கின்றன. 70-வது ஆண்டு விழா கண்காட்சி புத்தக வெளியீட்டுடன் இன்று தொடங்கியது.

இதுகுறித்து புதுச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் இயக்குநர் டாக்டர் ரெனாட் கால்சன் கூறுகையில், “பழங்கால புகைப்படங்கள், தென்னிந்திய கோயில்களின் சிலைகளை ஆவணப்படுத்தியது தொடங்கி இதுபோல் 70 ஆண்டு கால பணிகளை மாணவர்களுக்கு தெரிவிக்கிறோம். கணினி வருவதற்கு முன்பு இருந்த சூழல், தற்போது உள்ள சூழலையும் அறியலாம். சுற்றுச்சூழல் மாறுபாடு, தற்போது நிலவும் நிலை வரை அறியமுடியும்.

நாளை (அக்.23) பிரெஞ்சு - இந்திய கலைஞர்களின் பிரம்மாண்ட இசை கொண்டாட்ட நிகழ்வு நடக்கிறது. வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் பொதுமக்கள் பார்க்கலாம். அதற்கு பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் இணையத்தில் முன்பதிவு செய்து இலவச அனுமதி பெறலாம். வரும் 26-ம் தேதி தமிழ் காமிக்ஸ் காட்சி கலாச்சாரம் மற்றும் விஷுவல் கலாச்சாரம் குறித்த கலந்துரையாடல் நடக்கிறது என்றார்.

ஆராய்ச்சி அலுவலர் தாமரைக்கண்ணன் கூறுகையில், “பள்ளி, கல்லூரிகளில் இருந்து மாணவ, மாணவிகள் பிரெஞ்சு இன்ஸ்டிடியூட்டை முழுமையாக அறிய வருகை தரத் தொடங்கினர்.

ஆய்வுப் பணிகள் தொடர்பான நூலை வெளியிட்டுள்ளோம். அத்துடன் டாக்குமென்டரியும் வெளியிடவுள்ளோம். ஆய்வுப் பணிகள் பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் இணையத்திலும் உள்ளது. ஆய்வு படிப்புக்கான பல சந்தேகங்களை விளக்கவும் தனி கலந்துரையாடல் ஏற்பாடு செய்துள்ளோம். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ மாணவியரிடம் எங்கள் பணிகள் சென்றடையும்” என்றார்.

காமிக்ஸ் கண்காட்சி தொடர்பாக ஆராய்ச்சி அலுவலர் கண்ணன் கூறுகையில், “தமிழ் காமிக்ஸ் கண்காட்சி நடத்துகிறோம். பாரதியின் கருத்துப்படங்கள் 1906-ல் வெளியானது. இதையடுத்து 1960-ல் வெளியான தமிழ் காமிக்ஸ் தொடங்கி தற்காலம் வரையிலான புதிய காமிக்ஸ் வரை கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. அக்காலத்தில் இரும்பு கை மாயாவி தொடங்கி எம்ஜிஆர் காமிக்ஸ் நாயகனாக வந்த புத்தகம் மட்டுமில்லாமல் பொன்னியின் செல்வன் காமிக்ஸ் வரை இடம்பெற்றுள்ளது. அத்துடன் காமிக்ஸ் பற்றி திரையிலும் காண ஏற்பாடு செய்துள்ளோம்.” என்றார். காமிக்ஸ் கண்காட்சியையும் மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பார்த்தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT