சென்னை: கல்வி மையங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமென கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து விதமான உயர்கல்விநிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: உயர்கல்வி நிறுவனங்களில் ராகிங் தடுப்பு, பணிபுரியும் பெண்கள் மற்றும் மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தலைத் தடுக்க நடவடிக்கை, குறைதீர்ப்பாளர் நியமனம், கல்விக் கட்டணம் மற்றும் அசல் சான்றிதழ்களை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் தீவிரமாகப் பின்பற்றப்பட வேண்டும்.
குறிப்பாக ராகிங் தடுப்புக் குழு, குறைதீர்க்கும் பிரிவு போன்ற பல்வேறு குழுக்கள் மற்றும் பிரிவுகள் அமைக்கப்படுவதுடன், அவை திறம்பட செயல்படுவதை கல்லூரிகள் உறுதிசெய்ய வேண்டும். இந்தக் குழுக்கள் குறித்த விவரங்களை உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.
இதுதவிர புகார்கள் மற்றும் குறைகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வெளிப்படையான முறையில் சரிசெய்ய வேண்டும். மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்குதலை மேம்படுத்த வேண்டும். சிசிடிவி கண்காணிப்பு போன்ற வளாகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிசெய்ய வேண்டும்.
இதுசார்ந்த அனைத்து துணைவேந்தர்களும் மேற்கண்ட விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுவதை உறுதிசெய்யவும் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.