சென்னை: இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின்கீழ் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை திருமங்கலத்தில் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டாறில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி உள்ளன. அதேபோல், 29 தனியார் கல்லூரிகள் இருக்கின்றன.
இந்நிலையில் சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஓமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்) பட்டப் படிப்புகளுக்கு 2026-27-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பது கடந்த 13-ம் தேதி www.tnayushselection.org என்ற சுகாதாரத்துறை இணையதளத்தில் தொடங்கியது.
நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் இந்த 4 படிப்புகளுக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதுவரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்னப்பித்துள்ளனர்.
அதேபோல், சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகம் மற்றும் செங்கல்பட்டில் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியும், 17 தனியார் கல்லூரிகளும் உள்ளன.
இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்டப்படிப்புக்கு (பிஎன்ஒய்எஸ்) 2026-27-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பது கடந்த 13-ம் தேதி தொடங்கியது.
பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும், இந்த படிப்புக்கு இதுவரை 2,500-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இந்த படிப்புக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு இல்லை.
இந்த 5 ஆயுஷ் படிப்புகளுக்கும் ஆன்லைனில் விண்ணப்பிப்பது நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்த நிலையில், மாணவ, மாணவிகளின் கோரிக்கையை ஏற்று ஆன்லைனில் விண்ணப்பிப்பது ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை 5 மணி நீட்டிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, சிறப்பு பிரிவில் (மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர் வாரிசு, விளையாட்டு வீரர்) விண்ணப்பிப்பவர்கள் மட்டும் ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, கேட்கப்பட்டுள்ள அனைத்து சான்றிதழ்களிலும் சுய சான்றொப்பமிட்ட நகல்களை இணைத்து ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை 5 மணிக்குள் செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்ககம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை-106 என்ற முகவரியில் நேரிலோ தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.